செருக்கு என்ற குரங்கு அவ்வப்போது எனக்குள்ளேயிருந்து வெளிவந்துவிடுகிறது. காலம் சொல்லித்தரும் பாடங்களிலிருந்து அதனை உணரும்போது வெட்கி குனிகிறது ஒவ்வொரு இரத்த அணுக்களும்.
* வேலைவெட்டி இல்லாமல் சுற்றிய பொழுதுகளில் பிடிக்காத உணவுகளை பரிமாறும் அம்மாவிடம் " உன் மருமகனுகளுக்கு இப்படித்தான் பிடிக்காததை செய்வியா? நான் சும்மா இருப்பதால்தானே உனக்கு இளக்காரம்" என்று கூறியபொழுது அவர் மனம் எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கும்.....
* "ஜுரத்தில் கண்ணே தெரியவில்லை" என்று வலியை சொன்ன நண்பனிடம், "இல்லனா மட்டும் நம்ம கண்ணு நல்லா தெரிந்துவிடுமோ" என்று அவன் பார்வை குறைவினை நக்கலடித்தது அவனுக்கு எத்தனை வலியை தந்திருக்கும்...
* பசி என்றால் என்னவென்றே அறியாத என் வளர்ப்பு, அடித்து பிடித்து உண்ணுபவனை " முன்ன பின்ன சோத்தை பாத்ததே இல்லியா" என்று கிண்டலடித்தபோது அந்த சோறு எத்தனை கடினமாய் அவனுள் இறங்கியிருக்கும்....
* என்னை உயர்த்திக்கொள்ள " பொறுக்கிமாதிரி சுற்றிக்கொண்டிருப்பான்" என்று நண்பனை சபையில் மற்றவருக்கு அறிமுகப்படுத்தும்போது, அவனுள் எவ்வளவு தாழ்ந்து போயிருப்பேன்.
செறுக்கில் கொட்டிய இதுபோன்ற வரிகள் அவர்களுக்குள் மாறாத வடுக்களை ஏற்படுத்தி இருக்கும். அந்த வெட்க வடுக்கள் எனக்குள்ளும் அழியா கோலமாக...