Tuesday, January 14, 2014

தாத்தா நினைவலைகள் -3


அன்று நல்ல மழை பெய்துக்கொண்டிருந்தது. தாத்தா இரவு தொழுகையை தொழுதுவிட்டு பள்ளிவாசலை விட்டு வந்தவருக்கு முதல் முதலாக கடுமையான வலிப்பு வந்தது. 80 வயதை தாண்டிவிட்டவரின் உடல், உயிர் போய்விடுமோ என்கிற அளவுக்கு துடிக்கிறது. விஷயமறிந்து அருகிலிருந்த சொந்தங்கள் வீட்டில் 10 நிமிடங்களுக்குள்ளாகவே கூடிவிட்டது. விடாமல் துடித்துக்கொண்ட்ருப்பவரை, என் தந்தை மருத்துவமணை கொண்டுசெல்ல எத்தனிக்கையில், அத்தைகள், சொந்தங்கள் என பலரும் வேண்டாமென தடுக்கிறார்கள். கடுமையாக இழுத்துக்கொண்டிருக்கும் தாத்தாவின் உடலை பயணம்,மருத்துவமனை என மேலும் ரணப்பத்த வேண்டாமென்பது பெரும்பான்மையோரின் நிலையாகவிருந்தது. உயிர் போகப்போகிறது என பலரும் முடிவெடுத்துவிட்டிருந்தனர். அதையெல்லாம் உதாசினப்படுத்தி, தந்தை அங்கிருந்தவர்களோடு தாத்தாவை தூக்கி காத்திருந்த வாகனத்தில் ஏற்றி மருத்துவமனை செல்கிறார்கள். 80 வயதை கடந்தவரின் உடலை, அந்த கடுமையான மழையினில் நான்கைந்து நடுத்தரவயதினர் மிகவும் சிரமப்பட்டே வாகனத்தில் ஏற்ற முடிந்தது.

10 நிமிட பயனத்திலிருக்கும் ஆலை டாக்டர், வாகனத்துக்கே வந்து சோதித்துவிட்டு, முதலுதவியாக ஒரு ஊசியைபேட்டு, கடலூருக்கு எடுத்துசென்றால் நிச்சயம் முன்னேற்றமிருக்கும் என உறுதியளிக்கிறார். வலிப்பு குறைந்ததுபோல இருந்தது.    ஆனால் சுவாசம் சீராக இல்லை. நிலைகுத்தியிருந்த பார்வை அங்குமிங்கும் அசைய துவங்கியிருந்தது. நம்பிக்கையோடு கடலூருக்கு எடுத்துசெல்லப்பட்டார். ஐசியூ’வில் சேர்க்கை.

வாழ்நாளில் மிக மிகஅரிதாக மருத்துவ சிகிச்சைகளை எதிர்கொண்டவர், ஐசியு’வின் நடைமுடைகளுக்கு அந்த நிலையில்லாத நிலையிலும் எதிர்கொள்ள மறுக்கிறார். குளுகோஸ் ஏற்ற வேண்டி ஊசியை கைகளில் குத்தமுனைந்த பெண் நர்ஸ், தத்தா சிம்பியதில் இரண்டடி தள்ளி விழுகிறார். ஆக்ஸிஜன் மாஸ்கை ஆவேசாமாக பிடுங்கி எறிகிறார். தலைமை மருத்துவர் மயக்க ஊசியை போட சொல்கிறார். அதைபோட இரண்டுபோர் அவரின் கையை அழுத்திபிடிக்கவேண்டியிருந்தது. இத்தனையும் அவர் சீரான நிலையில் இல்லாதபோது நடக்கிறது. மயக்கமருந்துக்கு பின் உறங்கிபோகிறார். ஆக்ஸிஜனும், குளுகோஸும் செலுத்தப்படுகிறது. இரவெல்லாம், இரண்டு மூன்று மணிக்கொருமுறை அவர் மயக்கம் தெளிந்து கண் முழிக்கும்போதெல்லாம் மாஸ்கை பிடுங்கியெறிகிறார். போரட்டம், மயக்க ஊசி என விடிகிறது அவருக்கும், அருகிலிருந்த எல்லோருக்கும்.

காலையில் பெரும்பான்மை இயல்புநிலை வந்துவிட்டது அவருக்கு. மூச்சு இயல்பாய், சீராய் ஆகிவிட்டது. ஆனால் விழித்தவுடன் வீட்டுக்கு செல்ல வேன்டுமென போராடுகிறார். அவிழும் கைலியின் முனையை கைகளில் சுருக்கி பிடித்துக்கொண்டு கட்டிலை விட்டு எழுந்து நிற்கிறார். அவரை சமாதானப்படுத்துவதென்பது எத்தனை சிரமமான காரியம் என்று அங்கிருந்தவர்கள் கதையாய் இன்றும் சொல்லிக்கேட்டிருக்கிறேன்.  பெரும்பாலும் மயக்கமருந்தே அவரை அங்கே தடுத்துவைக்க உதவியிருக்கிறது. அவரை சமாளிக்க இயலமையினாலேயே மருத்துவமனை அவரை இரண்டு நாட்களில் வீட்டுக்கு அனுப்பியது.

அன்றிலிருந்து வீட்டிலுள்ளவர்கள் வேறுவிதமான அனுபவங்களை சந்திக்கவேண்டியிருந்தது. மருத்துவ கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைக்க முழுமையாக மறுக்கிறார்.  எந்நேரமும் புகைத்துக்கொண்டிருந்த சுருட்டு தடைசெய்யப்பட்டதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வெளியில் செல்ல அனுமதிக்காததால் வருவோர் போவோரிடமெல்லாம் சுருட்டு வாங்கி வர கேட்டுக்கொண்டே இருந்தார். புகைக்கவிடாதீர்கள் என்பது மருத்திவரின் கண்டிப்பான உத்தரவென்பதால் என் தந்தையும் அந்த விஷயத்தினில் கடுமையை கடைபிடித்திருந்தார். ஆனால் நாளாக தாத்தாவின் தொல்லை தாங்கமுடியாத அளவுக்கு செல்லவே ஃபில்டர் சிகரெட்டை புகைக்க அனுமதியளிக்கப்பட்டது. இதிலெல்லாம் ஒன்னுமே இல்லையென தாத்தா புலம்பினாலும், பின் அதில் பழக்கப்பட்டுபோனார்.

ஒரு அதிகாலையில் பாட்டி எழுப்பினார். பரணில் போடப்பட்டிருந்த அவரின் சைக்கிளை அவராகவே பரணிலேறி இறக்கிக்கொண்டிருந்தார். நான் எவ்வளவோ தடுத்தும் அவரை தடுக்கமுடியவில்லை. துரிதமாக  தெருவுக்கு வந்தவர், சைக்கிளில் ஏற முயலும்போது நான் அவரின் கையை பிடித்து தடுத்தேன். லேசாக சிம்பியவர், என் பிடி கடுமையாக இருக்கவே வலுவை வரவழைத்து என் கையை தட்டிவிட்டார். அந்த தள்ளலில் நிலைதடுமாறி பொத்தென நடு ரோட்டில் விழுந்தேன்.  சுதாரித்து எழுந்து பார்கையில் தூரத்தில் தாத்தா போய்கொண்டிருந்தது தெரிந்தது.