பச்சையுமில்லாமல் நீலமுமில்லாமல் ஒருமாதிரி இங்கிலீஷ் நிறத்தில் எங்க வீட்டில் ஒரு ஸ்கூட்டர் இருந்தது. பஜாஜ் கப். அந்த ஸ்கூட்டர் வரலாற்றில் ஒரு தனித்துவம், என்னவென்றால், ஓட்டியவரை ஏதாவது ஒரு சந்தர்பத்தில் கிழே தள்ளியிருக்கும். அதில் சில்லறை வாங்காதவர் வெகு சொற்பமே. நானும் விழுந்திருக்கிறேன்.
ஒரு ஜூன் மாத மதியம். மாமா தன்னோட சிநேகிதன் ஒருத்தர கூட்டிக்கிட்டு வந்து " இல்யாஸ், இவருக்கு பக்கத்துல மாளிகைமேட்டுல ஏதோ சின்ன வேலை இருக்காம். கொஞ்சம் ஸ்கூட்டர்'ல கூட்டிட்டு போய் வந்துரு" ன்னாரு. வெட்டி ஆபிசரா இருக்குறதுனால இதுக்கெல்லாம் அறச்சீற்றம் கொள்ளமுடியாது. சரின்னு சட்டைய மாட்டிட்டு கிளம்பிட்டேன். வேலை முடிஞ்சி திரும்பி வர்றப்ப வீட்டுக்கு 5 கி.மீ. இருக்கும்போது வண்டி ஆப் ஆயிடுச்சு.. என்ன எதுன்னு பாக்கறதுக்குள்ள அந்த வழியா வந்த பஸ்ஸ நிறுத்தி ஏறிட்டு , "தம்பி, என்னன்னு பாத்துட்டு வந்துடு, எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு"ன்னு போயிட்டாரு மாமாவோட சிநேகிதரு. மதிய வெயிலு, ஈ, காக்கா இல்லாத ரோடு. சாய்ச்சி, ஓதச்சி ஸ்டார்ட் பண்ணி பாக்குறேன். ம்ஹும். பருப்பு வேகல. அஞ்சு கி.மீ. தள்ளிகிட்டே வந்து மெக்கானிக்கிட்ட காமிச்சா, "வென்று, பெட்ரோல் இல்லாம எப்படிடா ஸ்டார்ட் ஆகும்" ன்னு திட்றாரு. போற அவசரத்துல பெட்ரோல் இருக்கான்னு செக் பண்ணாம போனது என் தப்புதான். வெட்டியா வீட்டுல படுத்திருந்த என்னைய, யாரோட வேலைக்கு போனேனோ அவரு, இவனை இப்படி நட்ட நடுவுல விட்டுட்டு போறோமே என்கிற குற்றவுணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம போனாரே, அவரு மேல கொல வெறியில வீட்டுக்கு வந்தேன். மாமாகிட்ட அன்று போட்ட சண்டைல மனுஷன் ரொம்ப நாளு என்கிட்டே பேசல.
பரங்கிபேட்டையிலிருந்து தோஸ்த் ஒருத்தன் எங்கூருக்கு வந்திருந்தான். செகண்ட் ஷோ போலாமுன்னு ப்ளான் போட்டோம். நானு, லோக்கல் தோஸ்த் ஒருத்தன், விருந்தாளி தோஸ்த் மூணுபேரும் பக்கத்துல இருக்க பண்ரூட்டி போலாமுன்னு முடிவு. பஸ்சுல போனா செகண்ட் ஷோ முடிஞ்சு வரும்போது பஸ் இருக்காது. ஸ்கூட்டர்ல போலாம்னு சொன்னானுங்க. அன்னிக்கு பார்த்து அதுல ஒரு சிக்கல். லைட்ட போட்டா ஹாரனும் சேர்ந்து அடிக்கும். சரி சமாளிப்போமுன்னு வண்டிய எடுத்தாச்சு. ஊர் எல்லைய தாண்டுரவரைக்கும் லைட் தேவைப்படல. அப்புறமா லைட்ட போட்டா "டர்ர்ர்ர்ர்ர்ர்"ன்னு ஹாரன் சத்தம். முன்னாடி ஒரு லாரி போயிட்டிருந்துச்சு. லைட்ட ஆப் பண்ணிட்டு லாரிக்கு பின்னாடியே ஓட்டிட்டு போனேன். கொஞ்சம் கொஞ்சமா வேகமெடுத்தது லாரி. நானும் விடாமல் பின்னாடியே போனேன். ரயில்வே கேட்டுக்கு கிட்ட இருந்த ஸ்பீட் ப்ரேகரில் சட்டுன்னு பிரேக் போட்டுட்டான் லாரிக்காரன். நானும் அவசரமா பிரேக் போட ஸ்கூட்டர் ஸ்பீட் குறைந்து, நிற்க போகும் நேரத்தில் சாய ஆரம்பிச்சிடுச்சு. பின்னாடி உட்கார்ந்திருந்த தோஸ்துங்க வண்டி ஸ்லோவாயிட்டதால ஈசியா இறங்கிட்டானுங்க. நான் வண்டி விழுதேன்னு விடாம இருந்ததுல பக்கவாட்டில் இருக்கு மட்கார்ட் வலது கால பதம் பாத்துடுச்சு. கட்டியிருந்த கைலி திரைச்சீல மாதிரியாயிடுச்சு. பின்னாடி வந்த பஸ் கண்டக்டர் எட்டி பார்த்து " பன்னாடைங்களா, நீங்க குடிச்சிட்டு சாவறதுக்கு எங்க வண்டிதான் கிடைச்சுதா?"ன்னு போறபோக்குல வாழ்த்திட்டு போறாரு. "ஆமா, இவருதான் வந்து ஊத்திக்குடுத்தாரு"ன்னு சண்டை போடவெல்லாம் சக்தி இல்ல. காலெல்லாம் ஒரே எரிச்சல். இருட்டுல என்ன ஆச்சுன்னு பாக்க முடியல. சரி, இனி சினிமாவுக்கெல்லாம் போகமுடியாதுன்னு, வீட்டுக்கு வந்துட்டோம். வந்து கால பாத்தா, ஐஸ்-கரீம கரண்டியால மேலோட்டமா வழிச்சா மாதிரி காலுல தோல் வழிட்டிக்கிட்டிருந்தது. நாளு நாளைக்கு நடக்க முடியல.
அந்த ஸ்கூட்டர்'ல 80 , 90 ன்னு போனத இப்ப நினைச்சாலும் பகீர்'னு இருக்கு.
அப்பா ஒருதரம் அம்மாகிட்ட "தெருவுல எல்லாம் ரொம்ப வேகமா போறான் ஒம்புள்ள, எல்லாரும் எங்கிட்ட வந்து பிராது குடுக்குறாங்க, அவன கொஞ்சம் பாத்து பொறுமையா போவச்சொல்லு" ன்னு சொன்னாரு. அம்மா அதுக்கு "ஆமா ஒங்கள மாதிரி வயசானவங்க போற மாதிரி உருட்டிக்கிட்டா போவான். இளவயசு, கொஞ்சம் அப்பிடி-இப்படித்தான் இருப்பான். போவிங்களா'ன்னு சொல்லவும், சீரியஸா சொன்ன அப்பா " ஒன்கிட்ட வந்து சொன்னேன் பாரு" ன்னு சிரிச்சிகிட்டே போயிட்டாரு.!!
1 comment:
Even i had a bad experience with this same scooter. En Nalla naeram sillara konjam saetharala
Post a Comment