இந்த உலகினில் நேர்மையோடு வாழமுடியும் என்று நிரூபித்தவர் நீங்கள். நீங்கள் இறையடி சேர்ந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டு இருப்பது எனக்கு வியப்பொன்றும் இல்லை. காரணம் நீங்கள் வாழ்ந்த வாழ்கை.
எந்த நிலையிலும் நேர்மை தவறாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?
நீங்கள் வளம் குறைந்து காணப்பட்டபோதும், வசதிகள் இன்றி வாழ்ந்தபோதும் உங்கள் நேர்மைக்கு எந்த பங்கமும் வர வில்லையே!.
பின்னாளில் இறைவனின் பேருதவியினாலும் உங்கள் விடா முயற்சி மற்றும் உழைப்பினாலும் உங்களை வளம் வந்தடைந்தபோதும் நீங்கள் நிதானம் தவறாமல் இருந்தது இன்று நினைத்தாலும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. வளங்கள் உங்களின் குணங்களை கொஞ்சமும் அசைத்துவிடவில்லையே!
நேர்மையோடு இருப்பவர்கள் கண்டிப்பனவராய் இருக்க கண்டிருக்கிறேன் நான்.
இங்கேயும் நீங்கள் உங்களுக்கே உண்டான தனித்தன்மையோடு மாறுபடுகிறீர்கள்.
எதிரிகள், நண்பர்கள், பகைவர்கள், உறவுகள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் எல்லோரிடமும் மாறாத குழைந்தோடும் அன்பினை உங்களால் வித்யாசமின்றி எப்படி செலுத்த முடிந்தது.
கொலைகாரானே ஆனாலும் அவனிடம் உள்ள தனித்தன்மையை, நல்ல விஷயங்களை உங்களால் எப்படி பாராட்ட முடிந்தது..
அடுத்தவருடைய சந்தோசத்தினில் (அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் கூட)உங்களால் எப்படி புன்னகையோடு மகிழ்ந்திருக்க முடிந்தது..
நிறைய நிறைய மனிதர்களால் நிறையமுறை நீங்கள் ஏமாற்றபட்டிருக்கும்போது, உங்களால் ஏமாற்றப்பட்டவர் என்று ஒருவர் கூட இல்லையே. இது எப்படி உங்களுக்கு மட்டும் சாத்தியமானது?
மரணம் உங்களை தழுவும்போது பலர் உங்களுக்கு தரவேண்டிய கடன் பாக்கிகளை எங்களால் கணக்கெடுக்க தேவை இருந்ததே தவிர நீங்கள் தரவேண்டும் என்று ஒருவர் கூட கூப்பாடு போடவில்லையே.
பணம் வங்கியில் இருந்தால் தூங்கும். அதை விட அடுத்தவருக்கு உதவியாய் இருப்பது மேல் என்று எத்தனை முறை நீங்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்!!!. இது எப்படி இந்த நூற்றாண்டில் சாத்தியப்பட்டது உங்களுக்கு !!!.
நீங்கள் காட்டிய அன்பும் அக்கறையும் இன்றைக்கு எண்ணும்போதுகூட கண்களில் கண்ணீரை வரவழைக்கும் என்பதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. தன் மனைவி, தன் குழந்தை, தன் வீடு என்று சுயநலமாகிவிட்ட இந்த உலகினில் உங்கள் அன்புச்சிறகினை பாரபட்சம் இன்றி எல்லோரிடமும் விரிக்க எப்படி இயன்றது உங்களால்.
உங்கள் மரணத்தின் மூலம் கடைகோடி பிச்சைகாரனை கூட அழவைக்க உங்களால் எப்படி முடிந்தது?
இன்னொரு வியப்பு உங்கள் ரசிப்புத்தன்மை. எதை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி, ஒரு அர்பணிப்பு, ஒரு காதல் உண்டு உங்களிடம். கடிதங்கள் எழுதுவதாகட்டும், கேரம் விளையாடுவதாகட்டும், கண்ணாடியிலிருந்து காலனி வாங்குவது வரை எதிலும் ஒரு ரசனை உங்களுக்கு. இறைவணக்கம் செய்வதிலிருந்து நல்லவிஷயங்களுக்கு நன்றி சொல்லுவது வரை, எதிலும் ஒரு அழகு, அர்பணிப்பு. அர்பணிப்பு, காதல் இல்லாமல் எதையும் நீங்கள் செய்து நான் பார்த்ததில்லை.
ஒருவருடைய மரண இன்னொருவருக்கு இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உங்கள் மரணம் மட்டுமே எனக்கு உணர்த்தியது.
என்னோடு நீங்கள் இன்று இல்லாமல் போனாலும், உங்கள் மாறாத அன்பும் அரவரைப்பும் என்றென்றும் என் நினைவினில் நீங்காமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் ஆத்மாவுக்கு சாந்தியும் சமாதானமும் வழங்கிட இறைவனை என்றென்றும் வேண்டுகிறேன்.
2 comments:
very supre ilyas
Nice one keep writing I like you way of writing.
Post a Comment