Saturday, January 7, 2012

கடலூர்- உறைந்த உயிர்கள் - கரைந்த கனவுகள்

ஆனந்த விகடனில் எல்லோரும் "என் ஊர் " என்று எழுதுவதை வாசிக்கையில் நாமும் நம்ம ஊரைப்பற்றி கொஞ்சம் எழுதிப்பார்க்கலாமே என்று அடிக்கடி தோன்றும். யாருமே வாசிக்காத நம் எழுத்தை மெனக்கிட்டு எழுதவேண்டுமா என்கிற சோம்பலில் எழுதுவதே இல்லை.

இன்று எழுதிகிறேன். என் ஆழ்மனதினில் கரைந்து ஒடும் துக்கத்தை பதிந்திட வேண்டுமென எழுதுகிறேன். இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் என் ஊரை பற்றி எழுதுவேன் என கனவு கூட வந்ததில்லை.

கூப்பிடும் தூரத்தினில் கடல். கவிதை எழுதி விளையாட ஆறு. பச்சை வர்ணம் பூசிய வயல் வெளிகள். ஏறி விளையாட ஏரி. நெல், கரும்பு, முந்திரி, மா, பலா, மல்லாக்கொட்டை, கிழங்கு, நொங்கு, தென்னை என இந்த மண்ணில் எதை விதைத்தாலும், பொண்ணாகவே வளம் தரும். எல்லாமே கைக்கெட்டிய தூரத்தினில்.

இயற்கை அள்ளித்தந்த வளங்களை இன்று அதே இயற்கைக்கு காவு கொடுத்துவிட்டு கலங்கி நிற்கிறோம்.

சோறு போட்ட நிலத்தினில் சேறும் சகதியும் மட்டுமே தேறி நிற்கிறது.
குடிசை வீடுகள் என்று ஒன்று இருந்த சுவடே இல்லை.
அறுவடைக்கு காத்திருந்த நெல்வயல்கள் கருக்கலைந்து போயிருக்கிறது.
காலம் காலமாய் குலைதள்ளிய தென்னை, நிலைகுலைந்து காணப்படுகிறது.
பல ஆண்டு பழந்தந்த, பலன்தந்த பலாமரங்கள் நிலம் வீழ்ந்து கிடக்கிறது.
வயலில் வளர்த்த வாழைமரங்கள் வாசலில் வந்து கிடக்கிறது.

எல்லாம் நான்குமணிநேர புயலினால்.


எங்கள் வாழ்கையை நாற்பதாண்டுக்கு பின்னால் இருந்து நாங்கள் துவக்கவேண்டும்.

இன்றுவரை மின்சாரமில்லை. நியாயவிலைக்கு பால்தந்த பண்ணைகள், அநியாயத்துக்கு நிலைக்குலைந்து போய் உள்ளன. துரும்பை கூட தூக்கிப்போடாத அரசாங்கம் கணக்கு மட்டுமே எடுத்துசெல்கிறது. யாரும் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.எல்லோரும் உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்க யாரை அழைப்பது. குடிசைவாசிகளின் வீடு நடுத்தெருவாகிப்போனது. அள்ளித்தந்த கைகளுக்கு கிள்ளிதரக்கூட யாருமில்லை.

" என் அறுபதாண்டு வாழ்வில் இதுபோன்று ஒரு புயலை சந்திச்சதில்லை.மரம் விழுந்து பார்த்திருக்கிறேன். உடைந்து இப்போதுதான் பார்க்கிறேன். சுனாமி பல உயிர்களை கொன்றுசென்றது. இந்த புயல் பல உயிர்களை மட்டுமே விட்டுவிட்டு எல்லாவற்றையும் கொண்டுசென்றுவிட்டது."

" மரங்களில் பல கிளையில்லாமல்போனது. கிளையுள்ள மரங்களில் இலை இல்லாமல் போனது. காக்கா, குருவிகள் காணாமல் போயிருக்கிறது. "

" வெட்டுக்கு காத்திருந்த கரும்பினில் சோலைகள் இல்லை. அஞ்சு லட்ச கடனில் அம்பது சதவீதம் கூட அடையாது."

" தையில் அறுக்கவேண்டும். வைக்கோல் கூட தேறாது. நெல்லை விதைத்து விட்டு புல்லை அறுக்கவேனும்."

" அண்ணன் தம்பி மாமன் மச்சான்னு பாக்கல. தலைக்கட்டு அறைலிட்டரென அதே விலையில் பால் கொடுத்தேன். 'ஷெட்' எல்லாம் காத்துல போய்டுச்சு. கைய காலப்பிடிச்சி கடன்வாங்கித்தான் பால்பண்ணை வச்சேன். நாலு மணிநேரத்துல நாலு லட்சம் போய்டுச்சு"

" நாளைக்கு நானூறு வரும். கரண்டில்லாம கம்ப்யூட்டர் போடல வருமானம் போதல"

இது நான் அலைபேசியில் அழைக்கையில் சொந்தங்களும், நட்புக்களும் கொட்டியவை. இது போல ஆயரம், லட்சம் கதைகள், அத்தனையும் உன்மைகள்.

தொட்டுவிடும் தூரத்தினில் இருக்கும் பண்ரூட்டியில் அவலம் இன்னும் அதிகம்.

விழுந்த பலாமரங்களில் மகனின் கல்லூரி கனவு வீழ்ந்திருக்கிறது. மகளின் 'மண' கனவு கவிழ்ந்திருக்கிறது. முற்றுபெறாத வீடு நின்றிருக்கிறது.

இன்று வைக்கும் முந்திரி கன்று இன்னும் பத்தாண்டுக்கு பின்னரே பழம்தரும். அதுவரை சோறுக்கு என்னவழி, கரைசேர்க்க காத்திருக்கும் பிள்ளைகளுக்கென்ன வழி.

என்ன செய்ய போகிறது அரசாங்கம். எங்கள் உழைப்பினில் உண்ட உலகம் என்ன தரப்போகிறது எங்களுக்கு. எங்கள் வியர்வையில் பசியாறிய உயிர்கள் என்ன தீர்வு தரப்போகிறது. இறைவனே அறிவான்.

3 comments:

akbar ali said...

உயிர்ச்சேதம் என்பதை விட வாழ்வாதாரமான பயிர்ச்சேதம், பொருள் சேதம், வாழ்வாதார சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் தாக்கி 8நாட்கள் ஆகியும், இன்றும் அங்குள்ள மக்கள் குடிக்க நீரீன்றி, உண்ண உணவின்றி, படுக்க இடமின்றி கேட்பாரற்று கிடக்கிறார்கள்.
சுவராசியமான தகவல்கள்!நைஸ் தல...
Regards:
akbar ali melpattambakkam

musthaq said...

இதை படித்த பிறகு வார்த்தை வரவில்லை வெறும் கண்ணீர் தான் வருகிறது... படித்த எனக்கே இப்படி என்றால் இந்த தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.இன்ஷா அல்லாஹ் நம்மால் இயன்ற உதவிகளை செய்து விரைவில் எல்லோரும் பழைய நிலைக்கு திரும்ப வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

Suresh said...

மிக அழகான பதிவு . . . . கடலுரின் சேதம் எங்கள் கண் முன்னே தெரிகிறது .. ..