வளைகுடா வந்தப்பிறகு முதல் தாயக பயணம். விடுமுறையோடு திருமணமும் நிகழ்வதால் களைகட்டியது 'பர்சேசிங்'. திருமணதிற்கென்று ப்ரித்யோகமான உடைகளை வாங்கிக்கொண்டிருந்தோம் நானும் நண்பர்களும். பிளாட்பாரத்தில் சட்டை 5 ரியாலென ஒருவர் கிட்டத்தட்ட நூறு சட்டைகளை போட்டுக்கொண்டு விற்றுக்கொண்டிருந்தார். இரண்டு சட்டை வாங்கும்படி நண்பர் பரிந்துரைத்தார். கொடுக்கும் விலையை பொறுத்தே பொருளின் தரம் இருக்கும் என்பது என் எண்ணம். வேண்டாமென சொன்னேன். " யாராவது இல்லாதவங்களுக்கு கொடுக்கலாம், இரண்டு வாங்கிக்கொள்" என நண்பர் வற்புறுத்தினார். "கொடுப்பதை தரமானதாக கொடுக்கவேண்டும் இல்லாவிடில் கொடுக்காதிருப்பதே சிறந்தது" என மறுத்துரைத்தேன். "பத்து ரியால் கொடுக்க இவ்வளவு பேச்சு ஆவாதுடா மகனே" என நண்பர் இரண்டு சட்டைகளை கொண்டுவந்துவிட்டார்.
ஊருக்கு சென்ற பிறகு இவரிவருக்கு இதிதுவென கொடுத்தபின், இந்த இரண்டு சட்டைகளை யாருக்கும் கொடுக்கவில்லை. சொந்தத்திலொருவர் வீட்டுக்கு வந்திருக்கையில் அவருடையதை கொடுக்கும்போது இந்த சட்டையை கண்டு அதிலிருந்து ஒன்றை எடுத்துக்கொண்டார். நான் வேண்டாமென மறுத்தும் "நல்லாதாண்டா இருக்கு" என்று எடுத்துக்கொண்டார். மீதமொரு சட்டை என் அலமாரியிலேயே இருந்தது.
திருமணம் முடிந்து துணைவி வீடு வந்த பின் பிரிக்கப்படாத அந்த சட்டையை பார்த்து "யாருதுங்க இது, நல்ல சட்டையா இருக்கு " எனக்கேட்டார். அஞ்சு ரியால் சட்டை என பகடி செய்து பதில் சொன்னேன்.
ஒரு நாள் அந்த சட்டையை அணியும்படி மிகவும் வற்புறுத்தினார். நல்லாத்தான் இருக்கு என சான்றிதழ் வேறு. அரைமனதோடு அணிந்துசென்றேன். அருமையான மெல்லிய காட்டன் சட்டை அது. அணிவதற்கு சுகமாகவும் கச்சிதமாகவும் இருந்ததில் எனக்கு வியப்பிலும் வியப்பு. விருப்ப உடைகளில் ஒன்றாக அந்த அஞ்சு ரியால் சட்டை ஆகிப்போனது.
இது நடந்து ஏழாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. என் உயரத்திலும் எடையிலும் அதிக மாற்றமில்லாததால், இன்னமும் அந்த சட்டையை அணிந்துகொண்டுதானிருக்கிறேன். ஒரு நூலிழை கூட பிரியவில்லை. முதலில் போடும்போது இருந்த பொலிவிலும் மாற்றமில்லை.
இந்தமுறை பயணம் போகும்போது மற்றொரு சட்டையை எடுத்துசென்ற சொந்தத்திடம் "எதாவது வேண்டுமா இங்கிருந்து" என வினவுகையில், " நீ கல்யாணத்துக்கு வரும்போது ஒரு சட்டை கொடுத்தியே, அதுமாதிரி ஒன்னு ரெண்டு புடுச்சுக்குனு வாடா. நல்ல சட்டைடா அது " என்றார்.
அந்த அஞ்சு ரியால் சட்டையை எங்கிருந்து தேட..
No comments:
Post a Comment