Saturday, February 11, 2012

நீ......

கடுகடுவென இருந்தது உன் முகம்..

முந்தின இரவில் நிகழ்ந்த
முடியுறா முட்டல்களின் விளைவு.

சமாதான உடன்படிக்கை கொணர
சமயமில்லை எனக்கு.

பசையில்லாமலிருந்தது
பல் தூரிகை.

துண்டு வைக்கப்படுமிடம்
துப்புரவாய் இருந்தது

அணியவேண்டிய உடைகளை
அயர்ச்சியுடன் தேடி எடுக்கவேண்டியிருந்தது

அவசரமாய் கிளம்புகையில்
"சாப்பிட்டு போங்க" என
கூப்பிட்டு சொன்னாய்..

பசியிருந்தது..அதைவிட
கோபமிருந்தது.

பணியில் மூழ்கினாலும்
பசி மூழ்கடித்தது.

மதியம் உண்டபின்
மதியில் உன் பிம்பம்.

’சாப்பிட்டிருப்பாளா’ என்ற கேள்வி
சாட்டையாய் சுழன்றது.

மென்மனதை - கோபம்
'வன்'மனதாக்கியது.

நினைவுகளை நகர்த்திவிட்டு
பணிகளில் பிணைகிறேன்.

கதவு திறக்கையில்-உன்
கண் சிவந்திருந்தது.

காலையில் வாடியிருந்த
மலர்முகம் - அந்த
இரவு வேளையில்
இருளடைந்திருந்தது

உடை மாற்றி
'நடை' வந்தேன்
காலை, மேசையில்
வைத்த தோசை
மூலையில்
அப்படியே இருந்தது .

1 comment:

சசிகலா said...

இந்த தவிப்பு ஏங்க பேசி ஒரு முடிவுக்கு வாங்க .
அருமையா சொல்லிப் போகிறது தவிப்பின் வரிகளை .