Saturday, February 18, 2012

கேரம் போர்ட் - சில நினைவுகள்

நான் கொஞ்சம் சுமாரா கேரம் போர்ட் விளையாடுவேன். கேரம் போர்ட் விளையாடுவதும் அதை அழகாய் விளையாடுபவரையும் காண ரொம்பவும் பிடிக்கும். வேலை வெட்டி இல்லாம ஊர் சுத்திக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் பல இரவுகள் கேரம் போர்டின் துணையுடனேயே கழிந்திருக்கிறது.

பாலிடெக்னிக் முதலாமாண்டில் inter - college கேரம் போர்ட் காம்பட்டிஷன்.டபுள்ஸ். மெக்கானிக்கல் குருப்ல என்னோட, எங்க ஊர் பையன் 'குட்ட' குமாருன்னு ஒருத்தன். கேரம் போர்ட் நல்லா விளையாடுவானோ இல்லையோ, நாம என்ன சொல்லுறமோ அத கச்சிதமா செய்வான். நானும் அவனும் சேர்ந்து ஆடு ஆடுன்னு ஆடி எல்லா பசங்களையும் அடிச்சி துவைச்சிட்டு பைனலுக்கு வந்தாச்சு. யாருடா பைனல்ல நம்ம கூடன்னு பாத்தா பைனல் இயர் சீனியருங்க. ஒரே குருப். நாங்க பர்ஸ்ட் இயர். "பசங்களா ஒங்களுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. அடுத்த வருஷம் வெளையாடி ஜெயிச்சிக்குங்க" ன்னு ஆட்டைய போட்டுட்டானுங்க. சீனியருங்க சொல்லும்போது எதித்தெல்லாம் பேச முடியாது. நொங்கெடுத்துடுவானுங்க விட்டுக்கொடுத்துட்டு வந்துட்டோம். நம்ம கெரகம் அப்படி.



'அமான்' ன்னு ஒன்னு விட்ட மாமா ஒருத்தர். 'பேயாட்டம்' ஆடுவாரு. அவரு கேரம் போர்ட் விளையாடுவத நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம். மனுஷன் ஏழெட்டு காயின அசால்டா தொடர்ந்து போடுவாரு. அவரு செட்டு நாலஞ்சு பேர். டபுள்ஸ் தான் விளையாடுங்க. எப்படியும் ஜெயிச்சிடுவேன்னு எதிராளி நெனச்சிக்கிட்டு இருக்கும்போது சரசரன்னு மனுஷன் போர்ட முடிச்சிடுவாரு. எனக்கெல்லாம் தொடர்ந்து ரெண்டு பாக்கெட் போடவே நாக்கு தள்ளிடும். மனுஷன் கலங்காம நாலு கட்டடிப்பாரு. அவரு விளையாடுவத பாக்கவும், அவங்க செட்டுங்க அடிக்கிற 'கமன்ட்டு' கள கேக்கறதுக்கும் நான் தவறாம ஆஜராகிடுவேன். பட்டபேரெல்லாம் பயங்கரமா வப்பாங்க. எந்த சப்போர்ட்டும் இல்லாம நடுவிரலால ஒருத்தர் கேரம் விளையாடுவார். அவருக்கு "ஒரு விரல் கிரிஷ்ணராவ்" ன்னு பேர் வச்சாங்க. நான் கேரம் போர்ட் விளையாடி கற்றுக்கொண்டதைவிட அவரு விளையாடியதை பார்த்து கற்றுக்கொண்டதுதான் அதிகம்.

சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடியே போயி, கல்யாணம் முடிஞ்சி ரெண்டு மூணு நாலு இருந்துட்டுதான் வருவோம். ராத்திரி முழுக்க கேரம் போர்ட் கச்சேரிதான். என் சித்தப்பா ஒருத்தரு எந்த கல்யாணம் நடந்தாலும் கேரம் போர்ட் tournament ஒன்னு வச்சிடுவாரு. அவரும் நல்லா விளையாடுவாருன்னாலும் அவருக்கு நடுவரா இருக்கறதுல அலாதி. பன்னெண்டு பேரு. ஆறு ஆருன்னு ரெண்டு குருப்பா பிரிச்சி ஆட ஆரம்பிச்சோம். அடிச்சி நகர்த்திட்டு semi-final வந்தாச்சு. 'பஷீர் மாமா'ன்னு ஒருத்தர் நம்ம கூட 'semi' ல. நாப்பது வயசு இருக்கும். நல்லா டெக்னிக்கலா விளையாடுவாரு. இவ்வளவு பெரியவரு கூட விளையாடி ஜெயிக்கனுமா ன்னு கொஞ்சம் நடுக்கம். பரப்பரன்னு ஆட்டம். கல்யாண வீடே சுத்தி நின்னு வேடிக்கை பாக்குது. நான் 28 பாயின்ட். அவரு 23 . red and follow மட்டும்தான் இருக்கு 'போர்ட்'ல. யாரு முடிக்கிறாங்களோ அவங்க final . நான் ரெட் காயின போட்டுட்டேன். follow பாக்கெட்டுக்கு வெகு அருகில். மனுஷன் எழுந்துட்டாரு. எனக்கு "என்னடா இவ்வளவு பெரிய மனுசன 'ஜெயிக்கனுமா' ன்னு தடுமாற்றம். மிஸ் பண்ணிட்டேன். பார்ட்டி அடுத்த 'அட்டம்ப்ட்'ல போர்ட முடிச்சி ஜெயிச்சிட்டாரு. "அவன் வேணுமுன்னே விட்டுக்கொடுத்துட்டான்"ன்னு அவரு சொன்னாலும் எனக்கு என்ன எதுன்னு தெரியாம ஒரு தடுமாற்றம். தோத்துட்டேன்.

வளைகுடா வந்த பின்னும் கேரம் போர்ட் விளையாடுவது நிக்கல. அண்ணன்காரன் ஒரு அருமையான கேரம் போர்ட் வச்சிருந்தான். எனக்கு அது செம க்ளோஸ். நான் சொன்னத கேக்கும். அந்த போர்ட்ல விளையாடுவது எனக்கு கொள்ளை சுகம். வெள்ளிக்கிழமை விடிய விடிய கேரம் போர்ட்தான். அனல் பறக்கும். அண்ணன்காரனும் நானும்தான் எப்போதும் ஒன்னா ஆடுவோம், 'டபுல்ஸ்'ல. எனக்கு சீரியஸா ஆடலைன்னா பயங்கர கோபம் வரும். அண்ணன் தூக்க கலக்கத்துல நல்லா கோட்டை விடுவாரு. செமையா திட்டுவேன். "நான் பாத்து பொறந்தது. ஜட்டி கூட போடாம என் கைய பிடிச்சிகிட்டு சுத்திக்கிட்டு இருந்ததுகிட்டவெல்லாம் திட்டு வாங்க வேண்டியிருக்கு' ன்னு அண்ணன் நக்கலடிப்பார். ஒக்காந்துக்கிட்டே தூங்குவாரு. அப்படி தூங்கிகிட்டே, எங்க தூக்கத்தையெல்லாம் கெடுத்துட்டு ஒரு நாள் போய் சேர்ந்துட்டாரு.

ஆட்டத்துல சேர்த்துகொள்ளாத பசங்க கடுப்பாகி ஒரு லோக்கல் கேரம்போர்ட் வாங்கி வந்துட்டாங்க. என்னோட ரூமில் ஒருபக்கம் நாங்களும் ஒரு பக்கம் சுமாரா விளையாடும் அப்ரசண்டிஸ்களும். நாங்கதான் சீரியஸா சத்தமெல்லாம் போடாமா விளையாடுவோம். அப்ரசண்டிகள் அப்படியில்லாம செம ஜாலியா விடையாடுவானுங்க. பவுடர் கேட்டா கூட நாங்க தரமாட்டோம். ஆனா அதுக்கெல்லாம் அசரமாட்டாங்க. இத்தனைக்கும் அது மோசமான போர்டு. சொள்ள சொள்ளையா இருக்கும். காயின்ஸ் எல்லாம் வெயிட் இல்லாம இருக்கும். ஒருநாள் பயங்கர சிரிப்பு சத்தம். என்னங்கடான்னா ஒன்னும் சொல்லாம சிரிக்கிறானுங்க. அப்புறமா சொன்னானுங்க, "டேய், நீங்க எல்லாம் எத்தன வருஷம் கேரம் விளையாடுறிங்க.நம்ம அண்ணாச்சி இன்னிக்கி ஒரு சாதன செஞ்சிருக்காரு. முடியுமாடா ஒங்களால"ன்னு நக்கல் அடிச்சானுங்க. விஷயம் இதுதான். points விளையாட காயின்ச அடுக்கி ஒருத்தர் ஹிட் அடிச்சிருக்காரு. வெயிட்லெஸ் காயினா இருந்ததுல நடுவுல இருந்த ரெட் காயின் எகிறி நேரா பாக்கெட்ல விழுந்துடுச்சு. எனக்கு தெரிஞ்சி ஹிட் அடிச்சி ரெட் போட்டவரு அவருதான். அந்த விருதை அப்ரசண்டிகளிடமிருந்து எங்களால இன்று வரை வாங்கமுடியவில்லை.

"நல்லாதான் விளையாடுற" என்று எல்லோரும் என்னை சொன்னாலும், முக்கியமான போட்டிகளில் நான் தோற்றே வந்திருக்கிறேன்.

No comments: