Sunday, September 11, 2011

தகர்க்கப்படும் கனவுகள்


அன்று வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது.

பல்துலக்கி, குளிக்காமல் முகம்கழுவி அவசரமாக தபால் நிலையம் செல்கிறேன்.

"எம்பேருக்கு எதாச்சும் கார்டு வந்திருக்கா"

தபால்காரர் என்னை ஒருமாதிரி பார்த்துவிட்டு, "ஒன்னும் வரல" என்றார். சிறிய கிராமமாதலால் அவருக்கு எல்லாரையும் தெரியும்.
"நல்லா பாருங்கண்ணே"
"வரலடான்னா, திரும்ப திரும்ப கேட்டுகிட்டு."

மனசுக்குள் இருந்த பயம் லேசா விலகிய உணர்வு. காலைகடன்களை கழிக்க நண்பர்களோடு களத்துமேட்டில் கலந்தேன்.

மூச்சிரைக்க பக்கத்து வீட்டு பையன் வந்து தகவல் சொன்னான். என் முகம் கலவரமாக தொடங்கி இருந்தது.

வீட்டு வாசலை அடைந்தவுடன் ஜன்னலில் அம்மா முகம் தெரிகிறது.அதில் அதிதுவென சொல்லமுடியா உணர்ச்சிகள். வயலுக்கு செல்ல ஸ்கூட்டரை படிகளில் பலவை போட்டு இறக்கிக்கொண்டிருந்தார் அப்பா. என்னை பார்த்தவுடன் முன்னமே இருந்த கோபம் இன்னும் கடுமையானது*.

"நல்லதா நாலு எருமை மாடு வாங்கி தருகிறேன். போய் அதயாவது ஒழுங்கா மேய்கிற வழியப்பாரு"

அவர் கண்களை காண தைரியம் இல்லாமல் தலைகுனிகிறேன். கண்ணீர் கசியத்தொடங்கியிருந்தது. காலையில் தபால்காரர் ஒருமாதிரியாக பார்த்தது நினைவுக்கு வந்தது.

ஒன்பதாம் வகுப்பு ரிசல்ட் வந்துவிட்டது .

*அன்று அப்பாவின் கண்களில் தெரிந்தது அவர் கனவுகள் தகர்க்கப்படும் உணர்வாக இன்று விளங்குகிறது.

Saturday, June 18, 2011

இது உண்மை என்கிறேன்.. சரியா?!!!

உங்கள் வீட்டு தொலைப்பேசி வேலை செய்யவில்லை. புகார் கொடுக்கிறீர்கள். பயனில்லை. நேரில் சென்று அழுத்தம் கொடுக்கிறீர்கள். எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இப்படியே ஒருவாரம் ஓடிவிடுகிறது.
என்ன செய்வீர்கள்?!!!!

மூன்றே வழிகள்...

  1. ஆகும்போது ஆகட்டும் என்று பேசாமலிருந்துவிடுவீர்கள்.!!!
  2. மேலதிகாரிகளுக்கு புகார் எழுதுகிறீர்கள். சட்டத்தின் கதவுகளை தட்டுவேன் என்று எச்சரிக்கை விடுக்கிறீர்கள்.
  3. அங்கே பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுனரிடம் கையூட்டு தருவதாக சொல்லி காரியத்தினை கச்சிதமாக முடித்துக்கொள்கிறீர்கள்.

சரி ஆகும்போது ஆகட்டும் என்று பேசாமலிருந்துவிடுவீர்கள்.!!!

உங்களுடைய தொலைப்பேசி சரிசெய்யப்படும். ஒருவாரமோ, மாதமோ ஆகலாம். ஆனால் சரிசெய்யப்படும். எந்தவித எதிர் நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கையில், PASSENGER இரயில் வேகத்தில் நிதானமாக சரி செய்யப்படும். மீண்டும் ஓரிரு முறை புகார் கொடுக்க வேண்டிவரலாம். அப்படி கொடுக்கையில் எரிந்து விழும் அதிகாரியிடம் "சார் சார் பாத்து செய்ங்க சார்" என்று சொரனையே இல்லாமல் கெஞ்ச வேண்டிவரலாம்.

மேலதிகாரிகளுக்கு புகார் எழுதுகிறீர்கள். சட்டத்தின் கதவுகளை தட்டுவேன் என்று எச்சரிக்கை விடுக்கிறீர்கள்.

"ஒரு ஆடு சிக்கிக்கிச்சு" என்கிற தோரணையில் நீங்கள் அங்கும் இங்கும் இழுத்தடிக்கப்படுவீர்கள். "புகார் கொடுத்த இல்ல. போத்திகிட்டு இரு " போன்ற ஏளன பேச்சுக்கள், "ஒங்க லைன CUT பண்ணியாச்சு அப்பு , ஒன்னால முடிஞ்சத பாத்துக்க", போன்ற தெனாவட்டு பதில்களுக்கு செவிகொடுக்கப்பட வேண்டியிருக்கும். மேலும் சட்டம் பேசிக்கொண்டிருந்தால் நீங்கள் மிரட்டப்படலாம். இதற்கு மேலும் உங்கள் புகார் வெளியே வருமானால் உங்கள் வீட்டுக்கு சம்பந்தமே இல்லாத யாரோ சிலர் ஆட்டோவில் வந்து பயமுறுத்தி செல்லலாம். எதிர்க்க முற்படுவீர்களானால் அடிவிழ அதிகம் வாய்ப்பு உண்டு.

அங்கே பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுனரிடம் கையூட்டு தருவதாக சொல்லி காரியத்தினை கச்சிதமாக முடித்துக்கொள்கிறீர்கள்.

நீங்கள் சராசரி பொருளாதார சிக்கல் அதிகம் இல்லாத இந்திய குடிமகன். அடுத்த சில மணித்துளிகளில் உங்கள் தொலைப்பேசி செயல்படத்தொடங்கிவிடும். "நீக்கு போக்கு தெரிந்தவர்" என்று பெயரேடுக்கப்படுவீர்.

இது ஒரு உதாரணம் மட்டுமே. மேலே குறிப்பிட்டுள்ளவை நிதர்சனமான உண்மைகள்.

Monday, January 31, 2011

விளையாட்டாய் சொன்ன வரிகள்...



செருக்கு என்ற குரங்கு அவ்வப்போது எனக்குள்ளேயிருந்து வெளிவந்துவிடுகிறது. காலம் சொல்லித்தரும் பாடங்களிலிருந்து அதனை உணரும்போது வெட்கி குனிகிறது ஒவ்வொரு இரத்த அணுக்களும்.

* வேலைவெட்டி இல்லாமல் சுற்றிய பொழுதுகளில் பிடிக்காத உணவுகளை பரிமாறும் அம்மாவிடம் " உன் மருமகனுகளுக்கு இப்படித்தான் பிடிக்காததை செய்வியா? நான் சும்மா இருப்பதால்தானே உனக்கு இளக்காரம்" என்று கூறியபொழுது அவர் மனம் எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கும்.....

* "ஜுரத்தில் கண்ணே தெரியவில்லை" என்று வலியை சொன்ன நண்பனிடம், "இல்லனா மட்டும் நம்ம கண்ணு நல்லா தெரிந்துவிடுமோ" என்று அவன் பார்வை குறைவினை நக்கலடித்தது அவனுக்கு எத்தனை வலியை தந்திருக்கும்...

* பசி என்றால் என்னவென்றே அறியாத என் வளர்ப்பு, அடித்து பிடித்து உண்ணுபவனை " முன்ன பின்ன சோத்தை பாத்ததே இல்லியா" என்று கிண்டலடித்தபோது அந்த சோறு எத்தனை கடினமாய் அவனுள் இறங்கியிருக்கும்....

* என்னை உயர்த்திக்கொள்ள " பொறுக்கிமாதிரி சுற்றிக்கொண்டிருப்பான்" என்று நண்பனை சபையில் மற்றவருக்கு அறிமுகப்படுத்தும்போது, அவனுள் எவ்வளவு தாழ்ந்து போயிருப்பேன்.

செறுக்கில் கொட்டிய இதுபோன்ற வரிகள் அவர்களுக்குள் மாறாத வடுக்களை ஏற்படுத்தி இருக்கும். அந்த வெட்க வடுக்கள் எனக்குள்ளும் அழியா கோலமாக...