Saturday, April 7, 2012

மின்சாரமும்..மண்சோகமும்


ஒரு செய்தியை அவசியமாய் அப்பாவிடம் சொல்லவேண்டும். தொலைப்பேச கொஞ்சம் தயக்கம். வளைகுடா நேரம் இரவு 9 :30 தானென்றாலும் இந்தியநேரம் 12 :00. இரவு பத்து மணிக்கெல்லாம் தூங்கிவிடும் அவரை எழுப்ப தயக்கமென்றாலும், செய்தி முக்கியம். தொலைப்பேசினேன். ஒரே 'ரிங்'கில் எடுத்தார். விஷயத்தை சொல்லிவிட்டு," என்னப்பா தூங்கலையா?" ன்னு கேட்டேன். "எங்க தூங்குறது. கரண்ட் இல்ல " ன்னார் .

கடலூரிலிருந்து 15 கிமி. தூரத்திலிருக்கும் எங்கள் கிராமமானது 90 விழுக்காடு விவசாயபூமி. கரும்பும் நெல்லும் முக்கிய பயிர். என் பால்யத்தில் பயிர்விளைந்து நின்ற நிலங்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குடியிருப்புகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. மிச்சம்மீதி இருக்கும் விளைநிலங்களில் பயிர் செய்து கொண்டிருப்பவர்களெல்லாம் சீக்கிரம் விற்றுவிட்டு வெளிநாடுகளுக்கு மூட்டைகட்ட தயாராகி கொண்டிருக்கிறார்கள். காரணம் மின்சாரம்.


இரண்டு நாளுக்கு ஒருமுறை 3 - 5 மணிநேரம் மட்டுமே மின்சாரம். 4 -5 ஏக்கரில் கரும்புபயிரிட்டிருக்கும் என் தந்தை, " ஒரு சுற்று தண்ணீர் பாய்ச்ச 8 முதல் 10 நாட்கள் ஆகிறது. மூக்கப்பிடிச்சுகிட்டு கரண்ட்வரும் நேரத்த கண்கொத்தி பாம்பா கண்காணிச்சி தண்ணீர் பாய்ச்சினாலே ஒரு மாசத்துக்கு மூணு சுற்று பாய்ச்சமுடியல. இதுல எங்கிருந்து விவசாயம் பாக்குறது" என்கிறார். விவசாயக்காதலரான அவரிடம் இப்படிப்பட்ட சலிப்பினை இதற்கு முன் கேட்டிராத எனக்கு உறக்கம் வரமறுத்தது.

சரி, குடியிருப்பு பகுதிகளில் மின்சார நிலைமை எப்படி இருக்கிறது. கடந்த ஒருமாதகாலமாக காலை 6 - 9 மணிவரையிலும் மதியம் 12 -3 மணிவரையிலும் மட்டுமே தொடர்ச்சியாக மின்சாரமிருக்கிறது. மாலை 6 மணிக்கு வரும் மின்சாரமானது ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு முறை நின்று வருகிறது. அதாவது 45 நிமிடம் மின்சாரமிருந்தால் 45 நிறுத்திவைக்கப்படுகிறது.

வர்த்தக நேரங்களான காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை மின்சாரம் இருப்பது 3 மணி நேரம் மட்டுமே. மின்சாரத்தை சார்ந்து இயங்கும் சிறுதொழில்கள் முற்றிலுமாக சிதைந்து போயிருக்கிறது. பால் சேமிப்பு மின்பற்றாக்குறையினால் கெட்டுப்போய் பால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கணினி சார்த்த சிறுதொழில்கள் இயக்கமில்லாமல் புதைந்துகொண்டிருக்கிறது. இவ்வகை முதலீட்டாளர்கள் நஷ்டத்தினால் நசுங்கி, வருமானத்தை இழந்து வாழ வழியறியாது கலங்கி நிற்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மனம் கலங்கி போயிருக்கும் மக்களுக்கு நிம்மதி தரும் உறக்கமில்லை. இரவினில் தடைபட்டு தடைபட்டு வரும் மின்சாரம் தடையில்லா உறக்கத்தை தர மறுக்கிறது. கொசுத்தொல்லைகளிலிருந்து நேற்று பிறந்த குழந்தைகூட தப்பமுடியாமல் உறக்கம் தொலைக்கிறது.

ஏற்கனவே ’தானேஆடிய தாண்டவத்தில் ஆழ் மனதில் ஆறாத வடுக்களை கொண்டிருக்கும் எம்மக்களை, மனபிழற்வு ஏற்படாமல் காத்திடும் கடமை ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் ஒவ்வொரு அதிகாரிக்கும் உண்டு.

காரும் கணினியும் இன்றி வாழ்வு நகரும். நீரும் சோறும் இல்லாமல் போனால்...?!!!!