Tuesday, September 4, 2012

குரு பாணி


”யார் யாரெல்லாம் கட்டுரை எழுதிக்கொண்டு வரல. எழுதாதவங்க எழுந்து நில்லுங்க ”

ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் கேட்க அந்த வகுப்பிலிருந்த எல்லோரும் அமர்ந்திருந்தனர். என்னைத்தவிர.

”வாங்க தொர. வீட்டுப்பாடம் எழுதமுடியாத அளவுக்கு அய்யாவுக்கு என்ன வேல?”

“ராத்திரி கரண்ட்டு இல்ல சார். காலை’ல எழுதிக்கலாமுன்னு நினைச்சேன் சார். ஞாபகம் இல்லாம தூங்கிட்டேன் சார்.”

“இன்னைக்கு போடுற போடுல இனிமே மறதியே வராது. அப்படி கிளாசுக்கு வெளில போயி நில்லுங்க சார். பசங்களோட வீட்டுப்பாடத்த திருத்திட்டு வந்து கவனிச்சிக்கிறேன்”.

ஒருவித கலக்கம் வந்துவிட்டது எனக்கு. இந்த ஆங்கில ஆசிரியர் அடிப்பதற்கென்றே பேர் வாங்கினவர். அதுவுமில்லாம இன்று தொடந்து இரண்டு பீரியட் அவருடையது. அவருக்கென்று ஒரு பிரத்யோக பிரம்பு வைத்திருப்பார். மூங்கில் போன்றதொரு குச்சியில் முழுதும் சிகப்பு நிற டேப் சுற்றப்பட்டிருக்கும்.

பாடங்களை பார்வையிட்டுவிட்டு, “எல்லோரும் அவரவர் எழுதிவந்த கட்டுரையை வருகைப்பதிவேடு வரிசைப்படி ஒவ்வொருத்தரா எழுந்து படிங்க” என கூறிவிட்டு பிரம்பு கையோடு என்னிடம் வந்தார். “தொர மறந்துட்டீங்களா, இனிமே மறக்கவே மறக்காது” என அடிக்க துவங்கினார்.

கை, கால், முதுகு, பட்டெக்ஸ் என எதையும் விட அவருக்கு மனமில்லை. அடித்தார். அடித்தார். அடித்துக்கொண்டே இருந்தார். ஒரு அடிவாங்கிய வலி குறைவதற்குள் அடுத்த அடி விழுந்தது. அழுகை சத்தம் பக்கத்து வகுப்பறைகளில் கேட்டிருக்கக்கூடும். அந்த வகுப்பாசிரியர்கள் எட்டிப்பார்க்க வெட்கம் வந்தது. ஆனாலும் அவர்களில் யாராவது ஒருவர் வந்து இதை தடுத்திட மாட்டார்களா என்கிற ஏக்கமும் வந்தது. யாரும் வரவில்லை. என் அழுகை சத்தம் அதிகரிக்கும்போது மட்டும் எட்டிப்பார்த்து, பின் தலையை உள்ளிழுத்துகொண்டனர்.

ஒரு கட்டத்தில் பிரம்பு நார்நாரானது. வலியை மீறிய ஒரு நிம்மதி வந்தது. அந்த நிம்மதி வெகு நேரம் நீடித்திருக்கவில்லை. வகுப்பிலிருந்த ஒரு மாணவனை அழைத்து “ எலே..கீழ ஆபிஸ் ரூமுல இது மாதிரி ஒரு பிரம்பிருக்கும். எடுத்துட்டு வா” ன்னு அனுப்பி வைக்க வயிறு கலக்க ஆரம்பித்தது.

மீண்டும் அடிக்கும் படலம் தொடங்கியது. அவருக்கு கை வலிக்கும்போது வகுப்பறையை இரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் தொடங்குவார். உடலெங்கிலும் ஒரே எரிச்சல். முதுகில் தொடர்ந்து அடித்ததனால் சட்டை வேறு பின்புறம் கிழிந்துவிட்டிருந்தது. பொதுவாக ஒருவனை அடிக்கும்போது மற்ற மாணவர்களுக்கு ஒரு வித குறுகுறுப்பிருக்கும். இந்த முறை அதுபோன்றதொரு உணர்வு யாருடைய முகத்திலும் தென்படவில்லை, “ஐயோ பாவம்” என்கிற கவலையே தெரிகிறது.

இரண்டு வகுப்பு முடியும் வரை அடிக்கிறார். கண்களில் இவ்வளவு கண்ணீர் வரும் என்பதினை அன்றுதான் அறிகிறேன். மணி அடிக்கும்போது ஒருவித அமைதி வந்துசேர்கிறது மனதினில்.

“நியெல்லாம் உருப்பட்டீனா நான் வாத்தியார் தொழிலையே விட்டுடுறேன்” என சொல்லிவிட்டு பிரம்பை என்மேல் வீசி செல்கிறார்.

-ஆசிரியர்தின சிந்தனை