Tuesday, December 16, 2008

மும்பை தீவிரவாதமும் செய்தி சானல்களும்


தற்போது உள்ளே வெடிகுண்டு சத்தம் கேட்டது...

இப்போதுதான் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் பெரிய அளவில் கேட்டது..


இப்படியாக தொடர்து செய்திகளை பிளாஷ் நியூசாக வெளியிட்டு தங்களே முதன்மையான செய்திகளை தருவதாக பறைசாற்றி கொண்டு..அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டும் ராணுவ வீரர்களை புகழ்ந்துகொண்டும் நிமிடங்களை கடத்தி கொண்டு இருந்தனர்.


ஒரு செய்தியை எந்த ஆர்வத்தில் cover செய்து வெளியிட முயற்சி செய்கின்றனரோ.. அதே அளவு அந்த செய்தி தந்த பின்விளைவுகள் அல்லது அந்த செய்தி வர காரணாமான முன்விளைவுகளையோ மறந்துவிடுவதொடு வாசகர்களையும் பார்வையாளர்களையும் மறக்க செய்துவிடுகின்றனர்..


தங்களுக்கு விளம்பரமில்லாத விளம்பரம் தாராத எந்த செயல்களையும் செய்திகளையும் இந்த சானல்கள் ஊக்குவிப்பதே இல்லை.. இந்த சானல்களில் நடுநிலை என்பது எப்போதுமே கேள்விக்குறிதான். இந்த சானல்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியின் ஆதரவோடும் அல்லது ஆளுங்கட்சியின் எதிர்பாக இருக்கும் எதிர்கட்சியின் ஆதரவோடும் தங்கள் வருமானத்தை பெருக்கிகொள்வதை மட்டுமே குறிக்கோளாய் செயல்படுவாதகவே ஒரு சராசரி குடிமகனான எனக்கு படுகிறது..



தீண்டாமை இன்னும் எத்தனை கிராமங்களில் முழுமையாக தொடர்கிறது என்று எந்த சானலாது செய்தி சேகரித்து உண்மை நிலவரங்களை சொல்லுகிறதா ?


படிப்பு வாசனையே எட்டாத சிறார்கள் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உலகுக்கு சொல்லியிருக்கிறதா.. ?


விவசாயத்தையே நம்பியுள்ள விவசாயத்தையே மூலதனமாக கொண்ட இந்திய நாட்டில் விவசாயிகளின் தற்கொலை தொடர்கிறதே அது ஏன் என ஆய்வு மேற்கொண்டதுண்டா ?


பண முதலைகளுக்கு மட்டுமே செயல்படும் அரசுகளை சாட்டையை சுழற்றி விமர்சித்ததுண்டா?


எந்த வன்முறையையும் விழுந்து அடித்து கொண்டு கவர் செய்யும் இந்த மீடியாக்கள் அந்த வன்முறையின் வித்து எது என்றோ அல்லது அந்த கலவரத்தின் முடிவில் என்ன உண்மையில் நடந்தது என்ற ஆய்வு மேற்கொள்ளவோ தயாராக இருப்பதில்லை.


சுனாமி வந்தபோது அதற்கான எச்சரிக்கை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்தது ஆனால் நம் அரசாங்கம் அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது என்று ஒரு வாதம் வந்தது. அது எந்த அளவுக்கு உண்மை என்பதினை இந்த மீடியாக்கள் வெளியே கொண்டு வர முயற்சி எடுத்ததா.. அது உண்மை எனில் அதற்க்கு காரணமான நம்முடைய அரசாங்கத்தை தட்டி கேட்க எந்த செய்தி நிறுவனமாவது முன்வந்ததா ?

கும்பகோணத்தில் எரிந்து போன பிள்ளைகளை படம் எடுத்து வேக வேகமாக வெளியிட தெரிந்த இந்த செய்தி நிறுவனங்களுக்கு அதே போன்று இன்னும் எத்தனை பள்ளிகள் இங்கே இன்னும் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுப்பை எடுக்க தெரிந்ததா?


குஜராத்தில் அரசாங்கத்தால் திட்டமிட்டு நடைபெற்ற ஒரு இன கருவறுப்பை எந்த மீடியாவினாலும் பகிரங்கமாக குற்றம்சாற்றி அந்த அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புல்லையேனும் புடுங்க முடிந்ததா.. ?


மொத்தத்தில் இந்த மீடியாக்களுக்கு responsibility என்று எதுவும் இல்லை.
எறும்பை எருதுவாகவும் எருமையை எறும்பாகவும் காட்டி பணக்கார வர்க்கங்களுக்கு வாலை ஆட்டிக்கொண்டு வருமானம் சேர்க்கும் இந்த செய்தி நிறுவனங்களுக்கு வாழ்வுதான் எப்போதுமே..


இவர்களுக்கு சானியா மிர்சாவும் சச்சின் டேண்டுல்கருமே சாதனையாளர்கள்.

Monday, November 10, 2008

நாளைய உலகம்



எதிர்கால தலைமுறையினருக்கு வாழ்க்கை கடிணமானதாகவே இருக்கும் என்று எனக்கு படுகிறது. வாழ்கையின் வேகம் அதிகமாகிவிட்டிருக்கிறது. எங்கும் எதிலும் வேகம்...வேகம்... கணினி வேகமாயிருக்க வேண்டும். வாகனம் வேகமாயிருக்க வேண்டும். வருமாணம் வேகமாயிருக்க வேண்டும்... கற்றல் வேகமாயிருக்கவேண்டும்..இன்றைய நாட்கள் இப்படி வேகம்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கையில் நாளைய தலைமுறையினரின் காலங்கள் கடிணமானதாகவே இருக்கும் என்பது என் எண்ணம்.

தேவைக்கு அதிகமாக தேடல் தொடங்கிய மனிதன் வாழ்க்கை வாழ்தலின் முழு அர்த்தத்தினை விளங்கிகொள்ளவில்லை என்றே எனக்கு படுகிறது...தன்னுடைய தேவைக்காக மரங்களை வெட்டிய மனிதன் இன்று மழைக்கு அழுகிறான். சுயநலத்துக்காக மலைகளை தகர்த்த மனிதன் இன்று பூகம்பத்திற்கு அழுகிறான். இயற்கைக்கு மாறாக மனிதன் செய்த எந்தவொரு செயலும் இன்று மனிதனை கோர நகம்கொண்டு உச்சந்தலையில் கைவைத்து அழுத்துகிறது.
  • விஞ்ஞானம் எதைதந்தது மனிதனுக்கு?
    வரவேற்பறைக்கு வந்த தொலைக்காட்சியும் கணினியும் கண்குறைபாடை கொடுத்தது. கபடி விளையாடி உடல்வளர்த்த பிள்ளைகள் இன்று கணினி விளையாட்டிலேயே களைத்துபோய்விடுகின்றனர். தொலைக்காட்சி தொடரில் வந்த சண்டைகள் வீட்டுக்குளேயே தொடர்கிறது.
  • விரைந்து செல்லும் வாகனம் சுவாசத்தை கெடுத்தது.. உடலுக்கு கொழுப்பை தந்தது.கால் கிலோமீட்டர் நடக்கமுடியாமல் கால் டாக்ஸி தேட சொன்னது..
  • உள்ளங்கையில் உலகம் என்று வந்தது கைபேசி. மனிதன் உலகை அறிந்துகொண்டான். உள்ளங்களை அறிய மறந்தான். பக்கத்து வீட்டு பாட்டியின் பெயர் தெரியாதவன் பாபிலோனில் உள்ள பேபியின் பெயர் சொல்லுவான். தங்கையின் திருமணத்திற்கு செல்ல நேரமில்லாதவன் கனவு மங்கையின் கல்யாணத்திற்கு மலர் அனுப்புவான் இணையத்தின் மூலமாக.
  • பாஸ்ட் பூட், பாஸ்ட் டிராக் என்று உலக அவசரம் அசுரமாகிவிட்டிருக்கிறது. வாழ்கையை வாழ மறந்த மனிதன் இயற்கையை இயலாமையால் திட்டிகொண்டிருக்கிறான்.
  • கற்கால மனிதன் இன்றைய நாகரீக கால மனிதனை போல பொறாமை கொண்டிருக்கவில்லை. இத்தகைய கொலைவெறி அன்றில்லை. சேமிப்பு, உதவிகள் செய்துகொள்ளமையால் பிறந்தது. தனக்கென சேமிக்க தொடங்கிய மனிதன் தன்னை மட்டுமே தன் குடும்பத்தை மட்டுமே கணக்கில் கொண்டான். தனக்கு கிடைக்கும் ஒரு ரூபாய்க்காக மற்றவரின் இழப்பை நியாப்படுத்தினான்.

நாளைய உலகம் கவர்ச்சியால், பொறாமையால், இயலாமையால், விபச்சாரத்தினால், வட்டியினால், காழ்புனற்சியினால், பொய்யினால், துரோகத்தினால், சந்தேகத்தினால், நம்பிக்கையின்மையால் ஆளப்படும் என்றே எனக்கு படுகிறது..

Sunday, June 1, 2008

இயற்கை விவசாயம்

விளை நிலங்களை சாகடித்துவிட்டோம் என்கிற தலைப்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் உண்மை இதழுக்கு அளித்த நேர்காணலிலிருந்து என்னை கவர்த்த சில அம்சங்கள்.

  • 10 மாதம் பாடுபட்டு ஒரு பொருளை விளையவைக்கும் ஒரு விவசாயிக்கு கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் கிடைக்கிறது. அதை வாங்கும் ஒரு வியாபாரி இரண்டே நாளில் அதனை 26 ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்.
  • வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய உரங்களை போட்டால் அதிக விளைச்சலை பெறலாம் என்று ஆசைகாட்டி நம் நிலங்களை சாகடித்துவிட்டனர். ரசாயன உரங்களை பயன்படுத்தினால் அதிக விளைச்சலை பெறமுடியும் என்கிற தவறான எண்ணத்தை மற்ற வேண்டும். விளைச்சல் அதிகமாகிறதோ இல்லையோ விளைநிலங்கள் செத்துவிடும் என்பதினை விவசாயிகள் உணரவேண்டும்.
  • கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 1,66,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள்.
  • மக்கள் உணவுக்கு செலவழிப்பதை விட மருந்துக்கு அதிகள் செலவு செய்கின்றனர்.
  • இரசாயன உரங்களை அறவே புறந்தள்ளி, பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்

Saturday, May 31, 2008

சித்தப்பா

இந்த உலகினில் நேர்மையோடு வாழமுடியும் என்று நிரூபித்தவர் நீங்கள். நீங்கள் இறையடி சேர்ந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டு இருப்பது எனக்கு வியப்பொன்றும் இல்லை. காரணம் நீங்கள் வாழ்ந்த வாழ்கை.

எந்த நிலையிலும் நேர்மை தவறாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?

நீங்கள் வளம் குறைந்து காணப்பட்டபோதும், வசதிகள் இன்றி வாழ்ந்தபோதும் உங்கள் நேர்மைக்கு எந்த பங்கமும் வர வில்லையே!.

பின்னாளில் இறைவனின் பேருதவியினாலும் உங்கள் விடா முயற்சி மற்றும் உழைப்பினாலும் உங்களை வளம் வந்தடைந்தபோதும் நீங்கள் நிதானம் தவறாமல் இருந்தது இன்று நினைத்தாலும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. வளங்கள் உங்களின் குணங்களை கொஞ்சமும் அசைத்துவிடவில்லையே!

நேர்மையோடு இருப்பவர்கள் கண்டிப்பனவராய் இருக்க கண்டிருக்கிறேன் நான்.

இங்கேயும் நீங்கள் உங்களுக்கே உண்டான தனித்தன்மையோடு மாறுபடுகிறீர்கள்.

எதிரிகள், நண்பர்கள், பகைவர்கள், உறவுகள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் எல்லோரிடமும் மாறாத குழைந்தோடும் அன்பினை உங்களால் வித்யாசமின்றி எப்படி செலுத்த முடிந்தது.

கொலைகாரானே ஆனாலும் அவனிடம் உள்ள தனித்தன்மையை, நல்ல விஷயங்களை உங்களால் எப்படி பாராட்ட முடிந்தது..

அடுத்தவருடைய சந்தோசத்தினில் (அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் கூட)உங்களால் எப்படி புன்னகையோடு மகிழ்ந்திருக்க முடிந்தது..

நிறைய நிறைய மனிதர்களால் நிறையமுறை நீங்கள் ஏமாற்றபட்டிருக்கும்போது, உங்களால் ஏமாற்றப்பட்டவர் என்று ஒருவர் கூட இல்லையே. இது எப்படி உங்களுக்கு மட்டும் சாத்தியமானது?

மரணம் உங்களை தழுவும்போது பலர் உங்களுக்கு தரவேண்டிய கடன் பாக்கிகளை எங்களால் கணக்கெடுக்க தேவை இருந்ததே தவிர நீங்கள் தரவேண்டும் என்று ஒருவர் கூட கூப்பாடு போடவில்லையே.

பணம் வங்கியில் இருந்தால் தூங்கும். அதை விட அடுத்தவருக்கு உதவியாய் இருப்பது மேல் என்று எத்தனை முறை நீங்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்!!!. இது எப்படி இந்த நூற்றாண்டில் சாத்தியப்பட்டது உங்களுக்கு !!!.

நீங்கள் காட்டிய அன்பும் அக்கறையும் இன்றைக்கு எண்ணும்போதுகூட கண்களில் கண்ணீரை வரவழைக்கும் என்பதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. தன் மனைவி, தன் குழந்தை, தன் வீடு என்று சுயநலமாகிவிட்ட இந்த உலகினில் உங்கள் அன்புச்சிறகினை பாரபட்சம் இன்றி எல்லோரிடமும் விரிக்க எப்படி இயன்றது உங்களால்.

உங்கள் மரணத்தின் மூலம் கடைகோடி பிச்சைகாரனை கூட அழவைக்க உங்களால் எப்படி முடிந்தது?

இன்னொரு வியப்பு உங்கள் ரசிப்புத்தன்மை. எதை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி, ஒரு அர்பணிப்பு, ஒரு காதல் உண்டு உங்களிடம். கடிதங்கள் எழுதுவதாகட்டும், கேரம் விளையாடுவதாகட்டும், கண்ணாடியிலிருந்து காலனி வாங்குவது வரை எதிலும் ஒரு ரசனை உங்களுக்கு. இறைவணக்கம் செய்வதிலிருந்து நல்லவிஷயங்களுக்கு நன்றி சொல்லுவது வரை, எதிலும் ஒரு அழகு, அர்பணிப்பு. அர்பணிப்பு, காதல் இல்லாமல் எதையும் நீங்கள் செய்து நான் பார்த்ததில்லை.

ஒருவருடைய மரண இன்னொருவருக்கு இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உங்கள் மரணம் மட்டுமே எனக்கு உணர்த்தியது.

என்னோடு நீங்கள் இன்று இல்லாமல் போனாலும், உங்கள் மாறாத அன்பும் அரவரைப்பும் என்றென்றும் என் நினைவினில் நீங்காமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

உங்கள் ஆத்மாவுக்கு சாந்தியும் சமாதானமும் வழங்கிட இறைவனை என்றென்றும் வேண்டுகிறேன்.

Friday, May 30, 2008

வெற்றி

இவர்கள் நிஜமாகவே பாராட்டுக்கு உரியவர்கள்.

வெற்றி தோல்வி என்பது இயற்கையான ஒன்று. யாரும் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்க இயலாது. எந்த வெற்றிக்கு பின்னாலும் பல முயற்சிகள் மற்றும் தோல்விகளை கதைகள் உண்டு.

முழு மூச்சில் முயற்சித்து பெரும் வெற்றியானது பாராட்டப்படவேண்டிய ஒன்று. கொண்டாடப்படும் வெற்றியின் மதிப்பு குறைந்துபோய்விடுகிறது. ஆகவே நாம் கொண்டாடாமல் பாராட்டுவோம்.

எதுக்கு இந்த பில்ட்அப். பத்தாம் வகுப்பு தேர்வுகளில் முன்னணி மதிப்பெண் பெற்ற மணிகளை பாராட்டுவோம்.

சாதனை ! செய்தவர்களின் விவரம்:

1. பாளையங்கோட்டை st. இக்னேஷியஸ் பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி ராம் அம்பிகை. பெற்ற மதிப்பெண் 496/500.

2. சேரன்மாதேவி வீரனல்லூர் செய்ன்ட் ஜான்ஸ் மேல்நிலைபள்ளி மாணவர் ஜோசப் ஸ்டாலின், பாளையங்கோட்டை சாரா தக்கர் பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி ஷகீனா, பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைபள்ளி மாணவர் மருதுபாண்டியன், சென்னை சாந்தோம் செயின்ட் ரபெல்ஸ் மேல்நிலைபள்ளி மாணவி எஸ். சுவேதா . பெற்ற மதிப்பெண்கள் 494/500.

3. பாளையங்கோட்டை st. இக்னேஷியஸ் பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி ரமா சுவாதிகா, மதுரை சவ்ராஷ்டிரா பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி உமா பிரியா, சேலம் செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி இந்து கரூர் மாவட்டம் புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைபள்ளி மாணவர் செல்வராஜ், முசிறி அமலா பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி காயத்ரி, பட்டுக்கோட்டையை அடுத்த தாமரங்கோட்டை அரசு மேல்நிலைபள்ளி மாணவி ரபியாபேகம். கள்ளக்குருச்சி ஏ. கே. டி. நினைவு மேல்நிலைபள்ளி மாணவர் திருமால் செங்கல்பட்டு செயின்ட் மேரி பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி எம்லின் மெர்சி. பெற்ற மதிப்பெண்கள் 493/500.

பத்தாம் வகுப்பு மெட்ரிகுலேசன் தேர்வில் சாதனை ! செய்தவர்களின் விவரம்:

1. நாமக்கல் கே. பாளையம் எஸ் எம். லக்ஷ்மி அம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவி அபிராமி.பெற்ற மதிப்பெண்கள் 489/500.

2. நாமக்கல் கவரப்பெட்டை குறிஞ்சி மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவர் கரமத்துல்லா. பெற்ற மதிப்பெண்கள் 488/500.

3. குற்றாலம் பாரத் மாண்டிஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவி ராஜபு பாத்திமா, தருமபுரி ஸ்ரீ விஜய்விடி மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவர் விக்ரம், தருமபுரி இந்தியன் மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவி பிரியதர்ஷினி, வில்லிவாக்கம் ஸ்ரீ கிருஷ்ணசாமி மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவி.பெற்ற மதிப்பெண்கள் 487/500.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இறைவன் உங்கள் அனைவருக்கு நல்ல எதிர்காலத்தை தர பிராத்திக்கிறேன்.

வழக்கம் போல மாணவிகள் மாணவர்களை விட அதிக சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருப்பது வியப்பான விஷயமில்லை. பசங்க படிக்கிற வேலைய மட்டுமா பாக்குறானுங்க!. பல வேலைகள் இருக்குது அவனுங்களுக்கு!!!!

Wednesday, May 28, 2008

தன்னம்பிக்கை

நான் பயங்கர சோம்பேறி. நினைவில் தோன்றும் நூறு நல்ல சிந்தனைகளில் ஒன்று அல்லது இரண்டை மட்டுமே எழுத விழைவேன். என் அன்னை அடிக்கடி சொல்லுவது போல " கையாலாகாத காடமுட்டை " நான்.

போதும் சுயதம்பட்டம். எதையோ எழுதவேண்டும் என்று வந்தேனே.. ம்.. ம் மறந்துவிட்டது. யெஸ். ஞாபகம் வந்து விட்டது..பொதுவா பேனாவ எடுத்தா யாரையாவது விமர்சிக்கணும். இல்லையென்றால் கதை, கவிதை எழுதணும். எனக்கு மேலே சொன்ன எதுவும் எழுத வராது.. வேற எதை எழுதலாம் ? ..O.K. அன்றாடம் பார்க்கும் நல்ல விஷயங்களை பாராட்டி எழுதலாம் என்று தோன்றுகிறது. சரி. இன்றைய பாராட்டு.

" தீர்க்கமுடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை. மக்களுக்கு நன்மை தரக்கூடிய எந்த திட்டமும் தடைகளை கடந்து வெற்றி பெறுவது நிச்சயம்."

சொன்னது - கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவி திருமதி விஜயா கதிவேல்.

தன்னம்பிக்கையான வார்த்தைகளுக்கு அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.