Tuesday, January 14, 2014

தாத்தா நினைவலைகள் -3


அன்று நல்ல மழை பெய்துக்கொண்டிருந்தது. தாத்தா இரவு தொழுகையை தொழுதுவிட்டு பள்ளிவாசலை விட்டு வந்தவருக்கு முதல் முதலாக கடுமையான வலிப்பு வந்தது. 80 வயதை தாண்டிவிட்டவரின் உடல், உயிர் போய்விடுமோ என்கிற அளவுக்கு துடிக்கிறது. விஷயமறிந்து அருகிலிருந்த சொந்தங்கள் வீட்டில் 10 நிமிடங்களுக்குள்ளாகவே கூடிவிட்டது. விடாமல் துடித்துக்கொண்ட்ருப்பவரை, என் தந்தை மருத்துவமணை கொண்டுசெல்ல எத்தனிக்கையில், அத்தைகள், சொந்தங்கள் என பலரும் வேண்டாமென தடுக்கிறார்கள். கடுமையாக இழுத்துக்கொண்டிருக்கும் தாத்தாவின் உடலை பயணம்,மருத்துவமனை என மேலும் ரணப்பத்த வேண்டாமென்பது பெரும்பான்மையோரின் நிலையாகவிருந்தது. உயிர் போகப்போகிறது என பலரும் முடிவெடுத்துவிட்டிருந்தனர். அதையெல்லாம் உதாசினப்படுத்தி, தந்தை அங்கிருந்தவர்களோடு தாத்தாவை தூக்கி காத்திருந்த வாகனத்தில் ஏற்றி மருத்துவமனை செல்கிறார்கள். 80 வயதை கடந்தவரின் உடலை, அந்த கடுமையான மழையினில் நான்கைந்து நடுத்தரவயதினர் மிகவும் சிரமப்பட்டே வாகனத்தில் ஏற்ற முடிந்தது.

10 நிமிட பயனத்திலிருக்கும் ஆலை டாக்டர், வாகனத்துக்கே வந்து சோதித்துவிட்டு, முதலுதவியாக ஒரு ஊசியைபேட்டு, கடலூருக்கு எடுத்துசென்றால் நிச்சயம் முன்னேற்றமிருக்கும் என உறுதியளிக்கிறார். வலிப்பு குறைந்ததுபோல இருந்தது.    ஆனால் சுவாசம் சீராக இல்லை. நிலைகுத்தியிருந்த பார்வை அங்குமிங்கும் அசைய துவங்கியிருந்தது. நம்பிக்கையோடு கடலூருக்கு எடுத்துசெல்லப்பட்டார். ஐசியூ’வில் சேர்க்கை.

வாழ்நாளில் மிக மிகஅரிதாக மருத்துவ சிகிச்சைகளை எதிர்கொண்டவர், ஐசியு’வின் நடைமுடைகளுக்கு அந்த நிலையில்லாத நிலையிலும் எதிர்கொள்ள மறுக்கிறார். குளுகோஸ் ஏற்ற வேண்டி ஊசியை கைகளில் குத்தமுனைந்த பெண் நர்ஸ், தத்தா சிம்பியதில் இரண்டடி தள்ளி விழுகிறார். ஆக்ஸிஜன் மாஸ்கை ஆவேசாமாக பிடுங்கி எறிகிறார். தலைமை மருத்துவர் மயக்க ஊசியை போட சொல்கிறார். அதைபோட இரண்டுபோர் அவரின் கையை அழுத்திபிடிக்கவேண்டியிருந்தது. இத்தனையும் அவர் சீரான நிலையில் இல்லாதபோது நடக்கிறது. மயக்கமருந்துக்கு பின் உறங்கிபோகிறார். ஆக்ஸிஜனும், குளுகோஸும் செலுத்தப்படுகிறது. இரவெல்லாம், இரண்டு மூன்று மணிக்கொருமுறை அவர் மயக்கம் தெளிந்து கண் முழிக்கும்போதெல்லாம் மாஸ்கை பிடுங்கியெறிகிறார். போரட்டம், மயக்க ஊசி என விடிகிறது அவருக்கும், அருகிலிருந்த எல்லோருக்கும்.

காலையில் பெரும்பான்மை இயல்புநிலை வந்துவிட்டது அவருக்கு. மூச்சு இயல்பாய், சீராய் ஆகிவிட்டது. ஆனால் விழித்தவுடன் வீட்டுக்கு செல்ல வேன்டுமென போராடுகிறார். அவிழும் கைலியின் முனையை கைகளில் சுருக்கி பிடித்துக்கொண்டு கட்டிலை விட்டு எழுந்து நிற்கிறார். அவரை சமாதானப்படுத்துவதென்பது எத்தனை சிரமமான காரியம் என்று அங்கிருந்தவர்கள் கதையாய் இன்றும் சொல்லிக்கேட்டிருக்கிறேன்.  பெரும்பாலும் மயக்கமருந்தே அவரை அங்கே தடுத்துவைக்க உதவியிருக்கிறது. அவரை சமாளிக்க இயலமையினாலேயே மருத்துவமனை அவரை இரண்டு நாட்களில் வீட்டுக்கு அனுப்பியது.

அன்றிலிருந்து வீட்டிலுள்ளவர்கள் வேறுவிதமான அனுபவங்களை சந்திக்கவேண்டியிருந்தது. மருத்துவ கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைக்க முழுமையாக மறுக்கிறார்.  எந்நேரமும் புகைத்துக்கொண்டிருந்த சுருட்டு தடைசெய்யப்பட்டதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வெளியில் செல்ல அனுமதிக்காததால் வருவோர் போவோரிடமெல்லாம் சுருட்டு வாங்கி வர கேட்டுக்கொண்டே இருந்தார். புகைக்கவிடாதீர்கள் என்பது மருத்திவரின் கண்டிப்பான உத்தரவென்பதால் என் தந்தையும் அந்த விஷயத்தினில் கடுமையை கடைபிடித்திருந்தார். ஆனால் நாளாக தாத்தாவின் தொல்லை தாங்கமுடியாத அளவுக்கு செல்லவே ஃபில்டர் சிகரெட்டை புகைக்க அனுமதியளிக்கப்பட்டது. இதிலெல்லாம் ஒன்னுமே இல்லையென தாத்தா புலம்பினாலும், பின் அதில் பழக்கப்பட்டுபோனார்.

ஒரு அதிகாலையில் பாட்டி எழுப்பினார். பரணில் போடப்பட்டிருந்த அவரின் சைக்கிளை அவராகவே பரணிலேறி இறக்கிக்கொண்டிருந்தார். நான் எவ்வளவோ தடுத்தும் அவரை தடுக்கமுடியவில்லை. துரிதமாக  தெருவுக்கு வந்தவர், சைக்கிளில் ஏற முயலும்போது நான் அவரின் கையை பிடித்து தடுத்தேன். லேசாக சிம்பியவர், என் பிடி கடுமையாக இருக்கவே வலுவை வரவழைத்து என் கையை தட்டிவிட்டார். அந்த தள்ளலில் நிலைதடுமாறி பொத்தென நடு ரோட்டில் விழுந்தேன்.  சுதாரித்து எழுந்து பார்கையில் தூரத்தில் தாத்தா போய்கொண்டிருந்தது தெரிந்தது.

Thursday, November 28, 2013

தாத்தா நினைவலைகள்-2

எனக்கு நினைவு தெரிந்தது முதல் தாத்தா சைக்கிள் வைத்திருந்தார்.   பள்ளிவாசல், ஊரில் இருந்த கல்யாண மண்டபம், வயக்காடு என எங்கு செல்வதானாலும் அவர் பெரும்பாலும் சைக்கிளில்தான் செல்லுவார். கடலூர், நெல்லிக்குப்பம், பண்ரூட்டி, விழுப்புரம் என அருகிலுள்ள பல ஊர்களுக்கு அவர் சைக்கிளிலேயே சொல்வதை பார்த்திருக்கிறேன்.

அவருடைய சைக்கிளுக்கென சில தனிச்சிறப்புகள் உண்டு. அதை அவர் ரெடிமேடாக வாங்கியதில்லை. என் ’ட்ராயர் போட்ட’ வயதில் ஊரில் ஷரீப் பாய் சைக்கிள் கடையென்று ஒன்று இருந்தது. அங்கேதான் அவருடைய சைக்கிள் உருவாக்கம் நடைபெரும்.பெல்-கப், வீல்-கம்பி, ஹாண்டில் பார், ஸீட் கவர், சைக்கிள் செயின், பெடல், ட்யுப், டையர்,  என ஒவ்வொன்றாக கோர்க்கப்பட்டு முழு சைக்கிள் உருவாகிடும் அழகினை விழிகளை விரித்தவாறு பார்த்திருக்கிறேன். இடையிடையே சைக்கிள் கடைக்காரர் தேனீர் குடிக்க எழும்போதெல்லாம் எனக்கு கடுமையான கோபம் வரும். அவர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார் என தாத்தாவிடம் கூறியது நினைவில் நீங்காதிருக்கிறது. என்னை சமாதானப்படுத்தும் நோக்கில் தின்பதற்கு ஏதாவது வாங்கித்தருவார்.

சைக்கிளின் பின்புறம் வைக்கப்படும் கேரியர் கூட அவர் அப்படியே வாங்கியதில்லை. அதை கூட அளவு சொல்லி பட்டறையில் செய்து வருவார். மூட்டை வைக்க தேவையான அளவிலிருக்கும். செயின், வீல் முதல்கொண்டு எல்லாமும் சராசரி சைக்கிளை விட கொஞ்சம் தடிமனாகவும் பெரியதாகவும் இருக்கும். அதனாலேயே சைக்கிளின் எடை கூடி வெயிட்டாக இருக்கும். ஆனால் தாத்தாவுக்கு அது சுமையாக இருந்ததில்லை. மிக சாதரனமாகவே அதை அவர் ஓட்டிச்செல்லுவார்.

மூன்றாவது அல்லது நான்காவது வகுப்பு விடுமுறையின்போது வீட்டில் தாத்தா இல்லாத ஒரு நாள் குரங்கு பெடல் அடிக்கையில் நான் கீழே விழுந்து, அத்தனை கணமான சைக்கிள் என் மேலே விழுந்தது. இடது கையில் மூன்றுமாதங்களுக்கு கட்டுபோட்டிருந்தேன். இன்றைக்கும் கணமானதெதையும் தூக்கிடும்போது சுரீரென வலிக்கும். அப்படி வலிக்கும்போதெல்லாம் அவரும் சைக்கிளும் கண்திரையில் வந்து போவதுண்டு.

தாத்தா நினைவலைகள்-2

Wednesday, November 27, 2013

தாத்தா நினைவலைகள் - 1


தாத்தாவுக்கு அப்போ 65 வயசு. காலைல வீட்டுல சாப்பிட்டுட்டு சைக்கிளை எடுத்துட்டு போனவரு, மதிய சாப்பாட்டுக்கு வரல. சரி ஏதோ தோட்டத்துல வேலை இருக்கும் என யாரும் அவ்வளவு சீரியஸா எடுத்துக்கல. இருட்ட தொடங்கிய பின்னும் அவர் வீடு திரும்பாதது எல்லோரையும் கொஞ்சம் கலக்கம் அடைய செய்தது. அக்கம் பக்கம் விசாரித்தவரையில் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. தொலைப்பேசி வசதிகள் அதுவரை அண்டாத கிராமம் அது. சிறிய கிராமம் என்பதால் நாங்கள் எல்லோரிடமும் அவரை எங்கேதாவது யாராவது பார்தார்களா என விசாரிக்கையில் “பெரியப்பாவ சொர்னாவூருல சைக்கிள்ள பார்தேனே, உச்சிவெயிலுல” ன்னு சொந்தக்காரரு ஒருத்தரு சொன்னாரு. சொர்னாவூரு 5 கி.மீ. தானே. அங்க போயிருந்தா இந்நேரத்துக்கு வந்திருக்கனுமே என்கிற கவலையில் நாங்க எல்லோரும் தேடிக்கொண்டிருக்க, பாட்டி மட்டும் அதிக கலக்கமில்லாமல், “வந்து சாப்புடுங்க.. சின்ன பிள்ளைய தோடுற மாதிரி தேடிறீங்க” ன்னு சொல்லிட்டிருந்தாங்க . ஊரெல்லாம் தேடிட்டு 9 மணி வாக்கில் வீடு வரும்போது தாத்தா சைக்கிளை வீட்டுக்குள் ஏற்றிக்கொண்டிருந்தார்.

சித்தப்பா கொஞ்சம் கோபமாக “ எங்கே போயிட்டிங்க, நாங்க ஊரையே சல்லடை போட்டு தேடிட்டிருக்கோம், சொல்லிட்டு போவ மாட்டிங்களா?” என கேட்க, “எதுக்கு தேடுற, நானென்ன கொழந்தையா, தொலஞ்சி போவ, மோட்டரு காயில் தீஞ்சிபோச்சு, அதான் விழுப்புரம் போயி சரிபண்ணிட்டுவரேன்.” என்றார். அந்த கால பெருசுகள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். வீட்டில் அடுப்பெரிந்ததா எனும் கவலையை விட, நெல்லுக்கு தண்ணி பாய்ந்ததா என்கிற கவலையே அவர்களை அதிகம் ஆக்ரமித்திருந்திருக்கிறது.

30 கி.மீ. போக வர என மொத்தம் 60 கி.மீ அசால்டா போயிட்டு வந்திருக்கார் அந்த அறுபதை தாண்டிய வயதில்.

தாத்தா நினைவலைகள் - 1

Tuesday, September 4, 2012

குரு பாணி


”யார் யாரெல்லாம் கட்டுரை எழுதிக்கொண்டு வரல. எழுதாதவங்க எழுந்து நில்லுங்க ”

ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் கேட்க அந்த வகுப்பிலிருந்த எல்லோரும் அமர்ந்திருந்தனர். என்னைத்தவிர.

”வாங்க தொர. வீட்டுப்பாடம் எழுதமுடியாத அளவுக்கு அய்யாவுக்கு என்ன வேல?”

“ராத்திரி கரண்ட்டு இல்ல சார். காலை’ல எழுதிக்கலாமுன்னு நினைச்சேன் சார். ஞாபகம் இல்லாம தூங்கிட்டேன் சார்.”

“இன்னைக்கு போடுற போடுல இனிமே மறதியே வராது. அப்படி கிளாசுக்கு வெளில போயி நில்லுங்க சார். பசங்களோட வீட்டுப்பாடத்த திருத்திட்டு வந்து கவனிச்சிக்கிறேன்”.

ஒருவித கலக்கம் வந்துவிட்டது எனக்கு. இந்த ஆங்கில ஆசிரியர் அடிப்பதற்கென்றே பேர் வாங்கினவர். அதுவுமில்லாம இன்று தொடந்து இரண்டு பீரியட் அவருடையது. அவருக்கென்று ஒரு பிரத்யோக பிரம்பு வைத்திருப்பார். மூங்கில் போன்றதொரு குச்சியில் முழுதும் சிகப்பு நிற டேப் சுற்றப்பட்டிருக்கும்.

பாடங்களை பார்வையிட்டுவிட்டு, “எல்லோரும் அவரவர் எழுதிவந்த கட்டுரையை வருகைப்பதிவேடு வரிசைப்படி ஒவ்வொருத்தரா எழுந்து படிங்க” என கூறிவிட்டு பிரம்பு கையோடு என்னிடம் வந்தார். “தொர மறந்துட்டீங்களா, இனிமே மறக்கவே மறக்காது” என அடிக்க துவங்கினார்.

கை, கால், முதுகு, பட்டெக்ஸ் என எதையும் விட அவருக்கு மனமில்லை. அடித்தார். அடித்தார். அடித்துக்கொண்டே இருந்தார். ஒரு அடிவாங்கிய வலி குறைவதற்குள் அடுத்த அடி விழுந்தது. அழுகை சத்தம் பக்கத்து வகுப்பறைகளில் கேட்டிருக்கக்கூடும். அந்த வகுப்பாசிரியர்கள் எட்டிப்பார்க்க வெட்கம் வந்தது. ஆனாலும் அவர்களில் யாராவது ஒருவர் வந்து இதை தடுத்திட மாட்டார்களா என்கிற ஏக்கமும் வந்தது. யாரும் வரவில்லை. என் அழுகை சத்தம் அதிகரிக்கும்போது மட்டும் எட்டிப்பார்த்து, பின் தலையை உள்ளிழுத்துகொண்டனர்.

ஒரு கட்டத்தில் பிரம்பு நார்நாரானது. வலியை மீறிய ஒரு நிம்மதி வந்தது. அந்த நிம்மதி வெகு நேரம் நீடித்திருக்கவில்லை. வகுப்பிலிருந்த ஒரு மாணவனை அழைத்து “ எலே..கீழ ஆபிஸ் ரூமுல இது மாதிரி ஒரு பிரம்பிருக்கும். எடுத்துட்டு வா” ன்னு அனுப்பி வைக்க வயிறு கலக்க ஆரம்பித்தது.

மீண்டும் அடிக்கும் படலம் தொடங்கியது. அவருக்கு கை வலிக்கும்போது வகுப்பறையை இரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் தொடங்குவார். உடலெங்கிலும் ஒரே எரிச்சல். முதுகில் தொடர்ந்து அடித்ததனால் சட்டை வேறு பின்புறம் கிழிந்துவிட்டிருந்தது. பொதுவாக ஒருவனை அடிக்கும்போது மற்ற மாணவர்களுக்கு ஒரு வித குறுகுறுப்பிருக்கும். இந்த முறை அதுபோன்றதொரு உணர்வு யாருடைய முகத்திலும் தென்படவில்லை, “ஐயோ பாவம்” என்கிற கவலையே தெரிகிறது.

இரண்டு வகுப்பு முடியும் வரை அடிக்கிறார். கண்களில் இவ்வளவு கண்ணீர் வரும் என்பதினை அன்றுதான் அறிகிறேன். மணி அடிக்கும்போது ஒருவித அமைதி வந்துசேர்கிறது மனதினில்.

“நியெல்லாம் உருப்பட்டீனா நான் வாத்தியார் தொழிலையே விட்டுடுறேன்” என சொல்லிவிட்டு பிரம்பை என்மேல் வீசி செல்கிறார்.

-ஆசிரியர்தின சிந்தனை

Monday, August 27, 2012

மகிழ்ச்சி


சவுதி நேரம் 6 மணி. கைப்பேசி அடித்தது. தூக்கத்தில், அலாரம்தான் அடிக்கிறதென அவசரமில்லாமல் எழுந்து வந்து பார்ப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அரைதூக்கத்தில் அழைப்பா அல்லது அலாரமா என சட்டென புரியவில்லை.மிஸ்டு கால்என திரையில் கண்டவுடன் யாரென பார்த்தேன். இந்தியாவிலிருந்து மைத்துனன். லேசாக பதட்டம் தொற்றிக்கொண்டது. இப்பொழுதெல்லாம் நேரம்தவறி வரும் இந்திய அழைப்புகளை காணும்போதெல்லாம் ஒருவித கலக்கம் வந்துவிடுகிறது. சமீபத்திய மரண செய்திகள் ஏற்படுத்திய பாதிப்பாக இருக்கலாம்.

திரும்ப அழைத்தேன்


ஹலோ

என்ன தூக்கமா??”

எழுந்திருக்கிற நேரந்தான். சொல்லு

இல்ல. தம்பி இஸ்மாயிலு ஏதோ முக்கியமா பேசனும்ன்னான். என்னன்னு நீயே கேளு

கைப்பேசி கைமாறியது.


ஹலோ

சொல்லுடா, என்ன விஷயம்

ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன். உண்மையா?”

என்ன மேட்டர்?”

“___________________
யாமே?”

டாய்ய்ய் என கத்த வேண்டும் போலிருந்தது.


இந்த காலைவேளைல இது ரொம்ப முக்கியம்

அட சொல்லு. உண்மையா? பொய்யா?”

வெண்ண... போனை வையி, ஆபிஸுக்கு கெளம்பனும். அப்புறமா கூப்பிடுறேன்

அவன் மீண்டும் என்னவோ சொல்ல ஆரம்பிப்பது தெரிந்தது. தொடர்பை அணைக்கிறேன்.


--------------------


மற்றொரு நாள் அம்மாக்கு அழைக்கையில் இதே போன்றதொரு கேள்வி.


“__________________________
யாமே..ரொம்ப சந்தோஷமா இருக்கு

இதெல்லாம் ஒரு விஷயமாம்மா..யாரு சொன்னது உனக்கு

நல்ல விஷயமில்லையா..யாரு சொன்னா என்ன?”

சரி வை நாளைக்கு கூப்பிடுறேன்”.

ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியில் தொடர்பினை சட்டென துண்டிக்கிறேன்.


---------------------


நண்பர்கள்
, தங்கைகள், சொந்தங்கள் என நிறைய அழைப்புகளில் இதே கேள்வி தொடர்கிறது. யாருக்கும் ஆமாம், இல்லையென பதில் சொல்லாமல், “ஒலகத்துல இது ரொம்ம்ம்ப முக்கியமான விஷயம். எல்லாரும் இதையே கேட்டுகிட்டுஎன மழுப்பலாகவே பதிலளிக்கிறேன்.

----------------------


இரண்டு மாதங்கள் முழுமையடைந்து இருக்கிறது
, புகைப்பதை நிறுத்தி.

----------------------

திருமணம் முடிந்த நாளிலிருந்தே நாளைக்கு நாலு முறையாவது ‘விட்டுடுங்கசொல்ல சலித்ததில்லை மனைவி. அன்பாகவும் அழுதும், சண்டையிட்டும், குழைந்தும் என எல்லா ஆய்தங்களையும் உபயோகித்திருக்கிறாள். ஒவ்வொரு அழைப்பிலும், மறந்தும் சொல்ல தவறியதில்லை அம்மா. நலம் விரும்பிகள் நட்பூக்கள் என பலரும் வற்புறுத்தி வந்திருக்கின்றனர்.  

உணவில் குழம்பு, பொரியல் போன்ற கலவையோடு கடைசியாக புகைப்பதையும் சேர்த்துவைத்திருந்தேன். உண்டபின் புகைக்காவிடின் உண்ட திருப்தி வருவதில்லை என நம்பினேன். கையில் புகையாமல் காலைக்கடன் முடியாது என தீர்மானம் கொண்டிருந்தேன். கோபமும் இயலாமையும் வருகையில் உற்ற துனைவனாக, நம்பிக்கை தருபவனாக சிகரெட் இருப்பதாகவே உரக்க சொல்லிவந்திருக்கிறேன். சிகரெட் புகைந்துகொண்டு இருக்கையிலே சிந்தை சிறப்பாக செயல்படுகிறதென கர்வம் கூட கொண்டிருக்கிறேன்.

’இந்த மாமா மேல பேட் ஸ்மெல்(Bad Smell) அடிக்கிறது’ என சின்னஞ்சிறுப்பூக்கள் சொல்லும்போதும், ’சிகரெட் குடிச்சிட்டு பிள்ளைகளுக்கு முத்தம் குடுக்கிறீங்களே, அந்த நாத்தம் அவங்க மேலையும் அடிக்குது’ என மனைவி சுட்டிக்காட்டும்போதும், ’பல்லெல்லாம் மஞ்சலா இருக்கு, ஒதடு ஒரே கருப்பா இருக்கு’ என சொந்தங்கள் கேலி பேசிய போதும், ’சளி குறையவே மாட்டேங்குது டாக்டர் என்றால், சிகரெட்டை நிறுத்துங்க தானாகவே குறைந்து விடும்’ என மருத்துவர் நகைத்தபோதும் என் தன்மானம் சீண்டப்படுவதாகவே எண்ணினேன். கொஞ்சமும் வெட்கம் கொள்ளவில்லை. என் உடையெல்லாம் சிகரெட் வாசமே நிறைந்திருப்பதாக சுட்டிக்காட்டியவர்களிடம் பெருங்கோபம் கொண்டு சண்டையிட்டிருக்கிறேன்.

என்றாலும் நிறுத்திவிட வேண்டுமென்ற சிந்தனையை நாள் முழுதும் என் சிந்தையில் ஏற்றியவாறே இருந்த குடும்பத்தினரும் நட்பூக்களும் கடைசியில் வென்று விட. சட்டென ஒரு நாள் நிறுத்தினேன்.இதை நிறுத்தியதொன்றும் சாதனையில்லைதான். உண்மையில் புகைக்கும் சுவையில் சுகம் கண்டவருக்கு அதிலிருந்து முற்றிலுமாக வெளிவருவது அத்தனை சுலபமான விஷயமில்லை. பிரிதொரு சந்தர்ப்பத்தினில் பலரும் மீண்டும் இந்த பழக்கத்தினை தொடங்கிவிடுவதாக அறிந்தே இருக்கிறேன். அதுபோன்றதொரு சந்தர்ப்பத்திலிருந்து இறைவன் என்னை காத்திட வேண்டுகிறேன். ஏனெனில் புகை தொடர்பினை விட்டொழித்ததில் நான் அடைந்திட்ட மகிழ்ச்சியினை விட என் நெருங்கிய சுற்றத்தார் அடைந்திருக்கும் சந்தோஷமானது நிலைத்திருக்கவே நான் விரும்புகிறேன்.

Saturday, July 7, 2012

இருவர்


ண்டையிட்டுக்கொண்டு சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடிவிட்டார். எனக்கு மாமா முறை. நீண்ட நாள் கழிந்து தந்தையின் மரண செய்தியறிந்து திரும்பி வந்து மீண்டும் குடும்பத்தோடு இணைந்து கொண்டவர்.  பின்னர் பணிக்காக வளைகுடா பயணம். கடிண வேலை என்றாலும் சுமாரான ஊதியம், நிலையான நிறுவனம். கொஞ்சம் தாமதமாக திருமணம்.  அடுத்தடுத்து மூன்று ஆண் பிள்ளைகள். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை விடுமுறைக்கு வரும் மாமா எனக்கு அதிகம் பழக்கமில்லை என்றாலும் அவரை ஏனோ எனக்கு பிடிக்கும்.   அளவாக ஒரு இடம் வாங்கி அதிலே அழகாய் ஒரு வீடு. பிள்ளைகளில் இரண்டு பேர் படித்து முடித்து பணியிலிருந்தனர். கடைக்குட்டி படித்துகொண்டிருந்தான். இருபதுக்கும் அதிகமான வருடங்கள் வளைகுடா வாழ்க்கைக்கு பின் உடல் நலமில்லாமல் வீடு வந்துவிட்டார்.

வர் குடும்பத்தின் முதல் ஆண்மகன். அக்காக்கள், தம்பிகள், தங்கைகள் என கொஞ்சம் பெரிய குடும்பம். தந்தையின் ஒரே வருமானம் போதாமல் போனதில் இளம் வயதிலேயே வளைகுடா வாசம். மிகக்கடினமான பெட்ரோல் போடும் வேலை. வெயில், மழை, குளிர் பொருட்படுத்தாது வேலை செய்திடல் வேண்டும். கொஞ்சம் நல்ல நிலை வந்தபின் திருமணம். தாமத திருமணம். மீண்டும் வளைகுடா வாசம். நான்கைந்து வருடம் கழிந்து, பெட்ரோல் வாசமும், அது தரும் அலர்ஜியும் பொறுக்காது வீடு திரும்பிவிட்டார். அடுத்தடுத்து மூன்று பெண்பிள்ளைகள். தனிக்குடித்தனம், வருமானமில்லாமல் நாட்கள் நகர மறுக்க,கடன் சுமைகள் கூடிவிட மீண்டும் வேலை தேடி வளைகுடா வாசம். ஒரு வருட போராட்டம், அலைச்சலுக்கு பின் வங்கியில் பியூன் போன்றதொரு வேலை, சுமாரான வருமானம். இரண்டு வருடம் எந்த இடையூறும் இல்லாமல் கழிந்தது. விடுமுறைக்கு வீடு வந்து சென்ற பின் அந்த வேலையில் வேறு ஒருவர் நிலைத்திட, இவருக்கு கடினமான வேலை தரப்பட, உடலும் மனமும் ஒத்துழைக்க மறுக்க, உடல்நலம் பாதிப்படைந்து வீடு திரும்பவேண்டியதாகிவிட்டது.

ந்த இருவரும் இன்று உயிரோடு இல்லை.

ருவருக்கும் அலர்ஜி, நுரையீரல் புண், சளி தொந்தரவு என சில நோய்கள் இருந்தது. ஆனாலும் எல்லா நோய்களுக்கும் ஒரு மூல காரணம் இருந்தது. அது புகைப்பிடித்தல்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில், ஒரு மருத்துவர், "கடவுள் ஒரு குடும்பத்த சோதிக்கனுமுன்னு நினைச்சா அந்த வீட்ல யாரவது ஒருத்தருக்கு கான்சர் நோய குடுத்துட்டா போதும்" ன்னு சொன்னார். உண்மைதான். ஒரு வீட்டினுடைய சேமிப்பு, சந்தோஷம், எதிர்காலம் அத்தனையும் புரட்டிபோட வல்லதுதான் புற்றுநோய்.

நானும், நண்பர்களும் விரும்பி சுவைத்துகொண்டிருந்த புகையிலை, இது போன்ற நெருக்கமானவர்களின் இழப்புகளின்போது மிகுதியாய் கசக்கிறது.

ரணம் என்பது எல்லாரும் சுவைத்தே ஆகவேண்டிய கசப்புமருந்துதான். அந்த கசப்பென்பது விதித்தவருக்கு மட்டுமேயன்றி, சுற்றத்தாருக்கும், சொந்தங்களுக்கும் விதித்ததில்லை.

வல்லமை தந்துவிடு இறைவா..

Sunday, June 17, 2012


 மழைக்காதலன்

பாலைவன சோலைகளில் பணி என்றாகிவிட்ட பின் வருடாந்தர விடுமுறையை பெரும்பாலும் அக்டோபர்-நவம்பர் மாதங்களிலேயே செல்ல விரும்புவேன். சொல்லத்தக்க காரணிகள் எதுவுமில்லை என்றாலும் கடலோர தென்னாற்காடு மாவட்டங்களில் மழைக்காலம் அது. எங்கேயும் செல்ல முடிவதில்லை என மனைவியின் சிணுங்கல், பருவநிலை மாற்றத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் சுகமின்மை போன்ற இடையூறுகள் இருந்தாலும், எங்கள் வீட்டு முன்வாசலில் இடப்பட்டிருக்கும் பெஞ்ச்'ல் அமர்ந்தும், மொட்டைமாடியில் இடப்பட்டிருக்கும் கீற்றுபந்தலின் ஊடாக மழையை ரசிக்கவேண்டும் என்பதே முன்னுரிமையாக இருந்திருக்கிறதெனக்கு..!!!


அடர்மழையின் சத்தத்திற்கு எந்த இசையும் ஈடில்லை. நல்ல உறக்கத்தில் இருந்தாலும் சடசடவென பெய்யும் மழையின் சத்தம் கனவில் கூட ஒலித்துக்கொண்டிருப்பது போலவே தோன்றும். வீட்டுக்குள் மழை பெய்யாதென்றாலும், வீடு நனைந்தே இருக்கும். வீட்டுக்குள் குளியலறை இருந்தும் தோட்டத்தில் சற்று தொலைவிலிருக்கும் குளியலறையில் மழை சாரலோடு குளிக்கவே மனம் விரும்பும். காலனிகளை தவிர்த்து பெரும்பாலும் வெறும் காலுடனே எங்கள் கிராம தெருக்களில் சுற்றுவேன். உள்ளம் நனைக்கும் மழையை அறியப்பெறுவேன்.ஒருமுறை தந்தை, மைத்துனன் சகிதம் எங்கள் வயலுக்கு சென்றிருந்தேன். நடுவயலில் நடந்துகொண்டிருக்கையில் சட்டென பொழிய துவங்கியது மழை. கொஞ்ச தூரமருகில் இருந்த கொட்டகைக்கு ஓடுகிறார்கள் தந்தையும் மைத்துனரும். நான் மிகப்பொறுமையாக மிக மிக பொறுமையாக நடக்க வியப்புடன் பார்த்த தந்தையை இன்னமும் நினைவிலிருக்கிறது. நான் மழைக்காதலன் என எப்படிச்சொல்வது அவரிடம்.