Monday, August 27, 2012

மகிழ்ச்சி


சவுதி நேரம் 6 மணி. கைப்பேசி அடித்தது. தூக்கத்தில், அலாரம்தான் அடிக்கிறதென அவசரமில்லாமல் எழுந்து வந்து பார்ப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அரைதூக்கத்தில் அழைப்பா அல்லது அலாரமா என சட்டென புரியவில்லை.மிஸ்டு கால்என திரையில் கண்டவுடன் யாரென பார்த்தேன். இந்தியாவிலிருந்து மைத்துனன். லேசாக பதட்டம் தொற்றிக்கொண்டது. இப்பொழுதெல்லாம் நேரம்தவறி வரும் இந்திய அழைப்புகளை காணும்போதெல்லாம் ஒருவித கலக்கம் வந்துவிடுகிறது. சமீபத்திய மரண செய்திகள் ஏற்படுத்திய பாதிப்பாக இருக்கலாம்.

திரும்ப அழைத்தேன்


ஹலோ

என்ன தூக்கமா??”

எழுந்திருக்கிற நேரந்தான். சொல்லு

இல்ல. தம்பி இஸ்மாயிலு ஏதோ முக்கியமா பேசனும்ன்னான். என்னன்னு நீயே கேளு

கைப்பேசி கைமாறியது.


ஹலோ

சொல்லுடா, என்ன விஷயம்

ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன். உண்மையா?”

என்ன மேட்டர்?”

“___________________
யாமே?”

டாய்ய்ய் என கத்த வேண்டும் போலிருந்தது.


இந்த காலைவேளைல இது ரொம்ப முக்கியம்

அட சொல்லு. உண்மையா? பொய்யா?”

வெண்ண... போனை வையி, ஆபிஸுக்கு கெளம்பனும். அப்புறமா கூப்பிடுறேன்

அவன் மீண்டும் என்னவோ சொல்ல ஆரம்பிப்பது தெரிந்தது. தொடர்பை அணைக்கிறேன்.


--------------------


மற்றொரு நாள் அம்மாக்கு அழைக்கையில் இதே போன்றதொரு கேள்வி.


“__________________________
யாமே..ரொம்ப சந்தோஷமா இருக்கு

இதெல்லாம் ஒரு விஷயமாம்மா..யாரு சொன்னது உனக்கு

நல்ல விஷயமில்லையா..யாரு சொன்னா என்ன?”

சரி வை நாளைக்கு கூப்பிடுறேன்”.

ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியில் தொடர்பினை சட்டென துண்டிக்கிறேன்.


---------------------


நண்பர்கள்
, தங்கைகள், சொந்தங்கள் என நிறைய அழைப்புகளில் இதே கேள்வி தொடர்கிறது. யாருக்கும் ஆமாம், இல்லையென பதில் சொல்லாமல், “ஒலகத்துல இது ரொம்ம்ம்ப முக்கியமான விஷயம். எல்லாரும் இதையே கேட்டுகிட்டுஎன மழுப்பலாகவே பதிலளிக்கிறேன்.

----------------------


இரண்டு மாதங்கள் முழுமையடைந்து இருக்கிறது
, புகைப்பதை நிறுத்தி.

----------------------

திருமணம் முடிந்த நாளிலிருந்தே நாளைக்கு நாலு முறையாவது ‘விட்டுடுங்கசொல்ல சலித்ததில்லை மனைவி. அன்பாகவும் அழுதும், சண்டையிட்டும், குழைந்தும் என எல்லா ஆய்தங்களையும் உபயோகித்திருக்கிறாள். ஒவ்வொரு அழைப்பிலும், மறந்தும் சொல்ல தவறியதில்லை அம்மா. நலம் விரும்பிகள் நட்பூக்கள் என பலரும் வற்புறுத்தி வந்திருக்கின்றனர்.  

உணவில் குழம்பு, பொரியல் போன்ற கலவையோடு கடைசியாக புகைப்பதையும் சேர்த்துவைத்திருந்தேன். உண்டபின் புகைக்காவிடின் உண்ட திருப்தி வருவதில்லை என நம்பினேன். கையில் புகையாமல் காலைக்கடன் முடியாது என தீர்மானம் கொண்டிருந்தேன். கோபமும் இயலாமையும் வருகையில் உற்ற துனைவனாக, நம்பிக்கை தருபவனாக சிகரெட் இருப்பதாகவே உரக்க சொல்லிவந்திருக்கிறேன். சிகரெட் புகைந்துகொண்டு இருக்கையிலே சிந்தை சிறப்பாக செயல்படுகிறதென கர்வம் கூட கொண்டிருக்கிறேன்.

’இந்த மாமா மேல பேட் ஸ்மெல்(Bad Smell) அடிக்கிறது’ என சின்னஞ்சிறுப்பூக்கள் சொல்லும்போதும், ’சிகரெட் குடிச்சிட்டு பிள்ளைகளுக்கு முத்தம் குடுக்கிறீங்களே, அந்த நாத்தம் அவங்க மேலையும் அடிக்குது’ என மனைவி சுட்டிக்காட்டும்போதும், ’பல்லெல்லாம் மஞ்சலா இருக்கு, ஒதடு ஒரே கருப்பா இருக்கு’ என சொந்தங்கள் கேலி பேசிய போதும், ’சளி குறையவே மாட்டேங்குது டாக்டர் என்றால், சிகரெட்டை நிறுத்துங்க தானாகவே குறைந்து விடும்’ என மருத்துவர் நகைத்தபோதும் என் தன்மானம் சீண்டப்படுவதாகவே எண்ணினேன். கொஞ்சமும் வெட்கம் கொள்ளவில்லை. என் உடையெல்லாம் சிகரெட் வாசமே நிறைந்திருப்பதாக சுட்டிக்காட்டியவர்களிடம் பெருங்கோபம் கொண்டு சண்டையிட்டிருக்கிறேன்.

என்றாலும் நிறுத்திவிட வேண்டுமென்ற சிந்தனையை நாள் முழுதும் என் சிந்தையில் ஏற்றியவாறே இருந்த குடும்பத்தினரும் நட்பூக்களும் கடைசியில் வென்று விட. சட்டென ஒரு நாள் நிறுத்தினேன்.இதை நிறுத்தியதொன்றும் சாதனையில்லைதான். உண்மையில் புகைக்கும் சுவையில் சுகம் கண்டவருக்கு அதிலிருந்து முற்றிலுமாக வெளிவருவது அத்தனை சுலபமான விஷயமில்லை. பிரிதொரு சந்தர்ப்பத்தினில் பலரும் மீண்டும் இந்த பழக்கத்தினை தொடங்கிவிடுவதாக அறிந்தே இருக்கிறேன். அதுபோன்றதொரு சந்தர்ப்பத்திலிருந்து இறைவன் என்னை காத்திட வேண்டுகிறேன். ஏனெனில் புகை தொடர்பினை விட்டொழித்ததில் நான் அடைந்திட்ட மகிழ்ச்சியினை விட என் நெருங்கிய சுற்றத்தார் அடைந்திருக்கும் சந்தோஷமானது நிலைத்திருக்கவே நான் விரும்புகிறேன்.