Saturday, June 18, 2011

இது உண்மை என்கிறேன்.. சரியா?!!!

உங்கள் வீட்டு தொலைப்பேசி வேலை செய்யவில்லை. புகார் கொடுக்கிறீர்கள். பயனில்லை. நேரில் சென்று அழுத்தம் கொடுக்கிறீர்கள். எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இப்படியே ஒருவாரம் ஓடிவிடுகிறது.
என்ன செய்வீர்கள்?!!!!

மூன்றே வழிகள்...

  1. ஆகும்போது ஆகட்டும் என்று பேசாமலிருந்துவிடுவீர்கள்.!!!
  2. மேலதிகாரிகளுக்கு புகார் எழுதுகிறீர்கள். சட்டத்தின் கதவுகளை தட்டுவேன் என்று எச்சரிக்கை விடுக்கிறீர்கள்.
  3. அங்கே பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுனரிடம் கையூட்டு தருவதாக சொல்லி காரியத்தினை கச்சிதமாக முடித்துக்கொள்கிறீர்கள்.

சரி ஆகும்போது ஆகட்டும் என்று பேசாமலிருந்துவிடுவீர்கள்.!!!

உங்களுடைய தொலைப்பேசி சரிசெய்யப்படும். ஒருவாரமோ, மாதமோ ஆகலாம். ஆனால் சரிசெய்யப்படும். எந்தவித எதிர் நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கையில், PASSENGER இரயில் வேகத்தில் நிதானமாக சரி செய்யப்படும். மீண்டும் ஓரிரு முறை புகார் கொடுக்க வேண்டிவரலாம். அப்படி கொடுக்கையில் எரிந்து விழும் அதிகாரியிடம் "சார் சார் பாத்து செய்ங்க சார்" என்று சொரனையே இல்லாமல் கெஞ்ச வேண்டிவரலாம்.

மேலதிகாரிகளுக்கு புகார் எழுதுகிறீர்கள். சட்டத்தின் கதவுகளை தட்டுவேன் என்று எச்சரிக்கை விடுக்கிறீர்கள்.

"ஒரு ஆடு சிக்கிக்கிச்சு" என்கிற தோரணையில் நீங்கள் அங்கும் இங்கும் இழுத்தடிக்கப்படுவீர்கள். "புகார் கொடுத்த இல்ல. போத்திகிட்டு இரு " போன்ற ஏளன பேச்சுக்கள், "ஒங்க லைன CUT பண்ணியாச்சு அப்பு , ஒன்னால முடிஞ்சத பாத்துக்க", போன்ற தெனாவட்டு பதில்களுக்கு செவிகொடுக்கப்பட வேண்டியிருக்கும். மேலும் சட்டம் பேசிக்கொண்டிருந்தால் நீங்கள் மிரட்டப்படலாம். இதற்கு மேலும் உங்கள் புகார் வெளியே வருமானால் உங்கள் வீட்டுக்கு சம்பந்தமே இல்லாத யாரோ சிலர் ஆட்டோவில் வந்து பயமுறுத்தி செல்லலாம். எதிர்க்க முற்படுவீர்களானால் அடிவிழ அதிகம் வாய்ப்பு உண்டு.

அங்கே பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுனரிடம் கையூட்டு தருவதாக சொல்லி காரியத்தினை கச்சிதமாக முடித்துக்கொள்கிறீர்கள்.

நீங்கள் சராசரி பொருளாதார சிக்கல் அதிகம் இல்லாத இந்திய குடிமகன். அடுத்த சில மணித்துளிகளில் உங்கள் தொலைப்பேசி செயல்படத்தொடங்கிவிடும். "நீக்கு போக்கு தெரிந்தவர்" என்று பெயரேடுக்கப்படுவீர்.

இது ஒரு உதாரணம் மட்டுமே. மேலே குறிப்பிட்டுள்ளவை நிதர்சனமான உண்மைகள்.