Wednesday, November 27, 2013

தாத்தா நினைவலைகள் - 1


தாத்தாவுக்கு அப்போ 65 வயசு. காலைல வீட்டுல சாப்பிட்டுட்டு சைக்கிளை எடுத்துட்டு போனவரு, மதிய சாப்பாட்டுக்கு வரல. சரி ஏதோ தோட்டத்துல வேலை இருக்கும் என யாரும் அவ்வளவு சீரியஸா எடுத்துக்கல. இருட்ட தொடங்கிய பின்னும் அவர் வீடு திரும்பாதது எல்லோரையும் கொஞ்சம் கலக்கம் அடைய செய்தது. அக்கம் பக்கம் விசாரித்தவரையில் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. தொலைப்பேசி வசதிகள் அதுவரை அண்டாத கிராமம் அது. சிறிய கிராமம் என்பதால் நாங்கள் எல்லோரிடமும் அவரை எங்கேதாவது யாராவது பார்தார்களா என விசாரிக்கையில் “பெரியப்பாவ சொர்னாவூருல சைக்கிள்ள பார்தேனே, உச்சிவெயிலுல” ன்னு சொந்தக்காரரு ஒருத்தரு சொன்னாரு. சொர்னாவூரு 5 கி.மீ. தானே. அங்க போயிருந்தா இந்நேரத்துக்கு வந்திருக்கனுமே என்கிற கவலையில் நாங்க எல்லோரும் தேடிக்கொண்டிருக்க, பாட்டி மட்டும் அதிக கலக்கமில்லாமல், “வந்து சாப்புடுங்க.. சின்ன பிள்ளைய தோடுற மாதிரி தேடிறீங்க” ன்னு சொல்லிட்டிருந்தாங்க . ஊரெல்லாம் தேடிட்டு 9 மணி வாக்கில் வீடு வரும்போது தாத்தா சைக்கிளை வீட்டுக்குள் ஏற்றிக்கொண்டிருந்தார்.

சித்தப்பா கொஞ்சம் கோபமாக “ எங்கே போயிட்டிங்க, நாங்க ஊரையே சல்லடை போட்டு தேடிட்டிருக்கோம், சொல்லிட்டு போவ மாட்டிங்களா?” என கேட்க, “எதுக்கு தேடுற, நானென்ன கொழந்தையா, தொலஞ்சி போவ, மோட்டரு காயில் தீஞ்சிபோச்சு, அதான் விழுப்புரம் போயி சரிபண்ணிட்டுவரேன்.” என்றார். அந்த கால பெருசுகள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். வீட்டில் அடுப்பெரிந்ததா எனும் கவலையை விட, நெல்லுக்கு தண்ணி பாய்ந்ததா என்கிற கவலையே அவர்களை அதிகம் ஆக்ரமித்திருந்திருக்கிறது.

30 கி.மீ. போக வர என மொத்தம் 60 கி.மீ அசால்டா போயிட்டு வந்திருக்கார் அந்த அறுபதை தாண்டிய வயதில்.

தாத்தா நினைவலைகள் - 1

No comments: