Thursday, November 28, 2013

தாத்தா நினைவலைகள்-2

எனக்கு நினைவு தெரிந்தது முதல் தாத்தா சைக்கிள் வைத்திருந்தார்.   பள்ளிவாசல், ஊரில் இருந்த கல்யாண மண்டபம், வயக்காடு என எங்கு செல்வதானாலும் அவர் பெரும்பாலும் சைக்கிளில்தான் செல்லுவார். கடலூர், நெல்லிக்குப்பம், பண்ரூட்டி, விழுப்புரம் என அருகிலுள்ள பல ஊர்களுக்கு அவர் சைக்கிளிலேயே சொல்வதை பார்த்திருக்கிறேன்.

அவருடைய சைக்கிளுக்கென சில தனிச்சிறப்புகள் உண்டு. அதை அவர் ரெடிமேடாக வாங்கியதில்லை. என் ’ட்ராயர் போட்ட’ வயதில் ஊரில் ஷரீப் பாய் சைக்கிள் கடையென்று ஒன்று இருந்தது. அங்கேதான் அவருடைய சைக்கிள் உருவாக்கம் நடைபெரும்.பெல்-கப், வீல்-கம்பி, ஹாண்டில் பார், ஸீட் கவர், சைக்கிள் செயின், பெடல், ட்யுப், டையர்,  என ஒவ்வொன்றாக கோர்க்கப்பட்டு முழு சைக்கிள் உருவாகிடும் அழகினை விழிகளை விரித்தவாறு பார்த்திருக்கிறேன். இடையிடையே சைக்கிள் கடைக்காரர் தேனீர் குடிக்க எழும்போதெல்லாம் எனக்கு கடுமையான கோபம் வரும். அவர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார் என தாத்தாவிடம் கூறியது நினைவில் நீங்காதிருக்கிறது. என்னை சமாதானப்படுத்தும் நோக்கில் தின்பதற்கு ஏதாவது வாங்கித்தருவார்.

சைக்கிளின் பின்புறம் வைக்கப்படும் கேரியர் கூட அவர் அப்படியே வாங்கியதில்லை. அதை கூட அளவு சொல்லி பட்டறையில் செய்து வருவார். மூட்டை வைக்க தேவையான அளவிலிருக்கும். செயின், வீல் முதல்கொண்டு எல்லாமும் சராசரி சைக்கிளை விட கொஞ்சம் தடிமனாகவும் பெரியதாகவும் இருக்கும். அதனாலேயே சைக்கிளின் எடை கூடி வெயிட்டாக இருக்கும். ஆனால் தாத்தாவுக்கு அது சுமையாக இருந்ததில்லை. மிக சாதரனமாகவே அதை அவர் ஓட்டிச்செல்லுவார்.

மூன்றாவது அல்லது நான்காவது வகுப்பு விடுமுறையின்போது வீட்டில் தாத்தா இல்லாத ஒரு நாள் குரங்கு பெடல் அடிக்கையில் நான் கீழே விழுந்து, அத்தனை கணமான சைக்கிள் என் மேலே விழுந்தது. இடது கையில் மூன்றுமாதங்களுக்கு கட்டுபோட்டிருந்தேன். இன்றைக்கும் கணமானதெதையும் தூக்கிடும்போது சுரீரென வலிக்கும். அப்படி வலிக்கும்போதெல்லாம் அவரும் சைக்கிளும் கண்திரையில் வந்து போவதுண்டு.

தாத்தா நினைவலைகள்-2

No comments: