Sunday, June 17, 2012


 மழைக்காதலன்

பாலைவன சோலைகளில் பணி என்றாகிவிட்ட பின் வருடாந்தர விடுமுறையை பெரும்பாலும் அக்டோபர்-நவம்பர் மாதங்களிலேயே செல்ல விரும்புவேன். சொல்லத்தக்க காரணிகள் எதுவுமில்லை என்றாலும் கடலோர தென்னாற்காடு மாவட்டங்களில் மழைக்காலம் அது. எங்கேயும் செல்ல முடிவதில்லை என மனைவியின் சிணுங்கல், பருவநிலை மாற்றத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் சுகமின்மை போன்ற இடையூறுகள் இருந்தாலும், எங்கள் வீட்டு முன்வாசலில் இடப்பட்டிருக்கும் பெஞ்ச்'ல் அமர்ந்தும், மொட்டைமாடியில் இடப்பட்டிருக்கும் கீற்றுபந்தலின் ஊடாக மழையை ரசிக்கவேண்டும் என்பதே முன்னுரிமையாக இருந்திருக்கிறதெனக்கு..!!!


அடர்மழையின் சத்தத்திற்கு எந்த இசையும் ஈடில்லை. நல்ல உறக்கத்தில் இருந்தாலும் சடசடவென பெய்யும் மழையின் சத்தம் கனவில் கூட ஒலித்துக்கொண்டிருப்பது போலவே தோன்றும். வீட்டுக்குள் மழை பெய்யாதென்றாலும், வீடு நனைந்தே இருக்கும். வீட்டுக்குள் குளியலறை இருந்தும் தோட்டத்தில் சற்று தொலைவிலிருக்கும் குளியலறையில் மழை சாரலோடு குளிக்கவே மனம் விரும்பும். காலனிகளை தவிர்த்து பெரும்பாலும் வெறும் காலுடனே எங்கள் கிராம தெருக்களில் சுற்றுவேன். உள்ளம் நனைக்கும் மழையை அறியப்பெறுவேன்.



ஒருமுறை தந்தை, மைத்துனன் சகிதம் எங்கள் வயலுக்கு சென்றிருந்தேன். நடுவயலில் நடந்துகொண்டிருக்கையில் சட்டென பொழிய துவங்கியது மழை. கொஞ்ச தூரமருகில் இருந்த கொட்டகைக்கு ஓடுகிறார்கள் தந்தையும் மைத்துனரும். நான் மிகப்பொறுமையாக மிக மிக பொறுமையாக நடக்க வியப்புடன் பார்த்த தந்தையை இன்னமும் நினைவிலிருக்கிறது. நான் மழைக்காதலன் என எப்படிச்சொல்வது அவரிடம்.

No comments: